Sabarimala Temple: மகர விளக்கு ஜோதியின்போது கூட்ட நெரிசலை தவிர்க்க திருவாங்கூர் தேவசம் போர்டு நடவடிக்கை எடுத்துள்ளது.


சபரிமலை கோயில்:


கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை ஐயப்பன் கோயில். உலக புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கார்த்திகை மாதம் முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். அதனை தொடர்ந்து மகர விளக்கு ஜோதி பூஜைக்காக நடை திறக்கப்பட்டிருக்கும். இதனை தவிர்த்து மாதந்தோறும் பூஜைக்காக நடை திறக்கப்பட்டிருக்கும்.


அந்த வகையில் கடந்த மாதம் 16 ஆம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். சபரிமலை சீசன் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. மண்டல பூஜை டிசம்பர் 27ஆம் தேதி முடிந்த நிலையில், மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30 அன்று நடை திறக்கப்பட்டது.


வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம்:


இதனால், மீண்டும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்ததால் சபரிமலையில் பம்பை முதல் சன்னிதானம் வரை சுமார் 5 கி.மீ தூரம் வரை நீண்ட வரிசையில் நின்று தரிசனத்திற்காக காத்திருந்தனர்.  கூட்டம் அதிகளவில் இருப்பதால் தரிசன நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, சுப்ரபாத சேவை மற்றும் நெய் அபிஷேகத்திற்குப் பிறகு தரிசனங்கள் தொடங்கப்படும். பின்னர் மதியம் 1 மணிக்கு தரிசனம் நிறுத்தப்படும். அதன்பிறகு மாலை 4 மணிக்கு மீண்டும் தரிசனம் தொடங்கப்பட்டு இரவு 11 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.


ஸ்பாட் புக்கிங் நிறுத்தம்:


இதற்கிடையில், நேற்று புத்தாண்டு என்பதாலும் விடுமுறை நாள் என்பதாலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று ஆன்லைனில் முன்பதிவு செய்த 80 ஆயிரம் பக்தர்கள் மற்றும் உடனடி பதிவு செய்த பக்தர்களும் திரண்டு வந்ததால் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் தரிசனம் செய்திருக்கலாம் என திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அங்கேயே ஸ்பாட் புக்கிங் செய்து தரிசனம் செய்வது ஜனவரி 10ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக தேவஸ்தானம்  தெரிவித்துள்ளது.  நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் தரிசனம் செய்த நிலையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  


மேலும், சபரிமலையில் ஜனவரி 14ஆம் தேதிக்கான முன்பதிவு 50 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மகர விளக்கு ஜோதியின்போது கூட்ட நெரிசலை தவிர்க்க திருவாங்கூர் தேவசம் போர்டு  நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.