மகளிர் இட ஒதுக்கீடு மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட நிலையில் பாஜக மகளிர் அணி சார்பில் டெல்லியில் உள்ள பாஜக அலுவகத்தில்  பிரதமர் மோடிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 


இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடியின் காலில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரதமர் மோடி, ‘இப்படி எல்லாம் காலில் விழக்கூடாது’ என அவருக்கு அறிவுரை வழங்கினார்.






இந்நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக மகளிர் அணி தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் பெண் தொண்டர்கள் பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து தங்கள் மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்தனர்.  தொடர்ந்து பேசிய தேசிய தலைவர் ஜே.பி.நட்டா., “பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதில் எப்போதும் உறுதியாக உள்ளது. மேலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா  நம் அனைவருக்கும் ஒரு வரலாற்று தருணமாகும். இது நீண்ட காலம் நினைவுக் கூரப்படும்” என தெரிவித்தார். 


இதன்பின்னர் பேசிய பிரதமர் மோடி, “நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டப்பட்டது குறித்து வரும் தலைமுறையினர் விவாதிப்பார்கள். இந்தியாவின் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களை நான் வாழ்த்துகிறேன். செப்டம்பர் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் ஒரு புதிய வரலாறு படைக்கப்படுவதை நாங்கள் கண்டுள்ளோம். இந்த வரலாற்றை உருவாக்க மக்கள் எங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கியது எங்கள் அதிர்ஷ்டம். மகளிர் இடஒதுக்கீடு மசோதா சாதாரண சட்டமல்ல, புதிய இந்தியாவின் புதிய ஜனநாயக உறுதிப்பாட்டின் வெளிப்பாடாகும். 


பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் புதிய சகாப்தத்திற்கு நான் அளித்த உத்தரவாதத்தை நிறைவேற்றியதற்கான ஆதாரம் தான் இந்த மசோதா தான். பெண்களின் பாதுகாப்பு, மரியாதை, வளர்ச்சிக்கான திட்டங்களைக் கொண்டு வர பாஜக அரசு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது. சில முடிவுகள் நாட்டின் எதிர்காலத்தை மாற்றும் திறன் கொண்டவை, அத்தகைய ஒரு முடிவுக்கு நாங்கள் சாட்சியாக இருக்கிறோம்” என தெரிவித்தார்.