விமானத்தில் மூட்டைப் பூச்சி, கரப்பான் பூச்சி அப்புறம் விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி என செய்திகள் வருவது வழக்கம் தான். அண்மையில் கூட விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பாம்பின் தலை இருந்ததாக ஒரு விசித்திரமான செய்தி கூட வந்தது.


இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த இசையமைப்பாளர், இருமுறை கிராமி விருது வென்ற ரிக்கி கேஜுக்கு இப்படியொரு அனுபவம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ரிக்கி கேஜ் ஒரு வீடியோ பகிர்ந்துள்ளார். அதில் அவர் தான் அமர்ந்திருந்த இருக்கையின் அருகே இருந்த ஜன்னலில் கரப்பான் பூச்சி ஒன்று சுற்றிவருவதைக் காட்டியுள்ளார். பின்னர் அந்த வீடியோவின் கேப்ஷனாக, எங்களுடன் இண்டிகோ 6E2064 விமானத்தில் பாட்னாவிலிருந்து டெல்லி வரை இந்த கரப்பான் பூச்சி பயணித்தது. அக்டோபர் 13ஆம் தேதி நாங்கள் ஒன்றாகப் பயணித்தோம். அதற்கு ஒரு காம்ப்ளிமென்ட் மீல் கொடுத்திருப்பார்கள் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டிருந்தார். அவரது இந்த ட்வீட் வைரலானது.






அதற்கு இண்டிகோ நிறுவனம் பதிலளித்துள்ளது. அதில், மிஸ்டர் கேஜ் உங்களுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு நாங்கள் வருந்துகிறோம். விமானத்தில் இது போன்ற ஒரு பூச்சியைப் பார்ப்பது நிச்சயமாக மனச் சோர்வைத் தரும் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம்.






இது போன்ற பின்னூட்டங்களை நாங்கள் அக்கறையுடன் கவனத்தில் கொள்கிறோம். எங்களது அனைத்து விமானங்களுமே ஒவ்வொரு முறையும் பயணத்துக்கு தயாராகும் முன் சுத்தப்படுத்தப்பட்டு பூச்சிகளை அகற்ற ஃபூமிகேஷன் செய்யப்படுகிறது. இனியும் அது தொடர்ந்து செய்யப்படும். இப்போது தாங்கள் கவனத்திற்கு கொண்டுவந்துள்ள விமானத்தில் உடனடியாக தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். நீங்கள் அடுத்தமுறை எங்கள் விமானத்தில் பயணிக்கும் போது நிச்சயமாக சிறந்த அனுபவத்தைப் பெறுவீர்கள் என்று உறுதியளிக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.


ரிக்கி கேஜ் பகிர்ந்த வீடியோ 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. அதில் ஒரு பயணர், இண்டிகோ விமான நிறுவனம் ரிக்கி கேஜின் புகாரை கையாண்ட விதம் சரியில்லை. ஏதோ வழக்கமான பதில் போல் ஒரு பதிலைக் கூறியிருப்பது அதிருப்தியைத் தருகிறது. இதனை ஒரு பெரிய பொருட்டாகவே அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லையோ எனத் தோன்றுகிறது என்று பதிவிட்டுள்ளார்.


காலநிலை மாற்றம் சார்ந்த விழிப்புணர்வு:


ரிக்கி கேஜ் வெறும் பாடகர். இசையால் இதயங்களை நனைப்பவர் மட்டுமே என்று நினைக்க வேண்டாம். அவர் அதையும் தாண்டி தன் பேச்சால் மக்கள் மனங்களை தட்டி எழுப்புவரும் கூட. ஆம் காலநிலை மாற்றம் குறித்து அவர் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். கடந்த மாதம் கூட அவர் காலநிலை மாற்றம் குறித்து ஐ.நா. சபையில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.