இந்தாண்டின் இறுதியில் ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் கட்ட தேர்தலும் செப்டம்பர் 25ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும்  அக்டோபர் 1ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தலும் நடக்க உள்ளது.


ஜம்மு காஷ்மீர் தேர்தல்: வரும் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி, தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 1 மாதம் கூட இல்லாத நிலையில், தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது காங்கிரஸ். மக்களவை தேர்தலில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்று பலமான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உருவெடுத்துள்ளது. 


இப்படிப்பட்ட சூழலில், மாநில தேர்தல்களில் காங்கிரஸ் தலைவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஜம்மு காஷ்மீர் சென்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர்கள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோருடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.


இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதியாகியுள்ளது. அதன்படி, ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 51 இடங்களில் தேசிய மாநாட்டு கட்சியும் 32 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தொகுதி பங்கீடு இறுதியானது: கூட்டணியில் இடம்பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு தொகுதியும் பாந்தர்ஸ் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 5 தொகுதிகளில் இரண்டு கட்சிகளுக்கு இடையே உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் அந்த 5 தொகுதிகளிலும் 2 கட்சிகளும் போட்டியிட உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.


தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா, "இது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். இங்குள்ள மக்களை பிளவுபடுத்த முயலும் சக்திகளுக்கு எதிராக நாங்கள் இணைந்து இந்த பிரச்சாரத்தை தொடங்கினோம்.


இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. அதனால், வகுப்புவாத, பிளவுவாத, நாட்டை உடைக்க விரும்பும் சக்திகளை எதிர்த்து எங்களால் போராட முடிந்தது. இன்று நாங்கள் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துள்ளோம். காங்கிரஸும், தேசிய மாநாட்டுக் கட்சியும் இணைந்து தேர்தலை சந்திக்கும்" என்றார்.


மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி, இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சியுடனான தேர்தலுக்கு முந்தைய கூட்டணியில் இணையவில்லை. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு நடக்க உள்ள முதல் சட்டப்பேரவை தேர்தல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.