குழந்தை நட்சத்திரங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய (என்சிபிஆர்) தலைவர் பிரியங்க் கணுங்கோ எச்சரித்துள்ளார்.
இதையும் படிக்க: மன வருத்தத்தில் 63 ஒரு ரூபாய் நாணயங்களை விழுங்கிய நபர்... 2 நாட்களாக போராடிய மருத்துவர்கள்!
சினிமா, டிவி, ரியாலிட்டி ஷோ, சமூக ஊடகங்கள் மற்றும் ஓடிடி தளங்களில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்களுக்கான புதிய வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது. அனைத்து தரப்பு பங்குதாரர்களின் கருத்துக்களை கேட்டறிந்து, இந்த வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்க் கணுங்கோ அளித்த பேட்டியில், ‘‘புதிய வரைவு வழிகாட்டு நெறிமுறையில் உள்ள 90 சதவீத அம்சங்கள் ஏற்கனவே உள்ள சட்ட விதிமுறையில் இருப்பவைதான். இதில், குழந்தை நட்சத்திரங்களை உடல் மற்றும் உளவியவில் மன அழுத்தத்திலிருந்து பாதுகாப்பதற்கான சில அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: Breaking LIVE: துப்பாக்கியை பயன்படுத்துபவருக்கு துப்பாக்கியால் பதில் சொல்ல வேண்டும்..ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்த விதிமுறைகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மீறினால் சம்மந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எச்சரித்துள்ளார்.
புதிய விதிமுறைகளின்படி, எந்தவொரு குழந்தையும் தொடர்ந்து 27 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பில் வேலை செய்ய அனுமதிக்கப்படக் கூடாது, ஆறு மணி நேரத்துக்கு மேல் வேலை வாங்க கூடாது. குழந்தைகளின் வயது மற்றும் மனமுதிர்ச்சிக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்க வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, குழந்தை நட்சத்திரங்களை அதிக மணி நேரத்திற்கு நடிக்க வைத்து வேலை வாங்குவதாக புகார்கள் எழுந்த நிலையில், அதற்கான நேர கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் குழந்தைகளை நடிக்க வைப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
இச்சூழ்நிலையில்தான், புதிய விதிகள் வெளியிடப்பட்டன. இவற்றை கண்காணிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளது. இந்த புதிய விதிகளை, தயாரிப்பு நிறுவனங்கள் பின்பற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்