குழந்தை நட்சத்திரங்கள் என்ற பெயரிலும், மாஸ்டர், பேபி ஆகிய அடைமொழிகளுடனும் நடிகர், நடிகைகளைப் போலவே குழந்தைகளும் சினிமாவில் நடித்து வருகின்றனர். பெரியவர்களைப் போலவே இவர்களை ஊக்குவிக்கவும் தேசிய திரைப்பட விருதுகள் உள்பட பல்வேறு பிரிவுகளிலும் இந்தக் குழந்தை நட்சத்திரங்களுக்கென தனி பிரிவு உண்டு.


சினிமா முதல் இணையம் வரை


சினிமா தவிர சீரியல்களிலும் பல குழந்தை நட்சத்திரங்கள் பிரபலமாக விளங்குகின்றனர். மேலும், இன்றைய சமூக வலைதள யுகத்தில், டிக் டொக் தொடங்கி ரீல்ஸ் வரை பல குழந்தைகளும் தங்கள் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி பிரபலங்களாக உலா வருகின்றனர்.


இந்நிலையில் இந்தக் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், அவர்களது கல்வி, வேலை செய்யும் நேரம், குறைந்தபட்ச வயது உள்ளிட்டவை குறித்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தேசிய ஆணையம் வெளியிட்டுள்ளது.


குழந்தை நட்சத்திரங்களின் உரிமைகள்


அதன்படி, ”குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் பல சட்டங்கள் உள்ளன. அதே நேரத்தில் பொழுதுபோக்கு துறையில் பணியாற்றும் குழந்தைகளை பாதுகாப்பதற்கான முறையான வழிமுறைகள் இல்லை.


ஏற்கெனவே, 2011இல் சில வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. ஆனால், அதன்பின், பல்வேறு சட்டங்கள், விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும், பொழுதுபோக்கு துறையும் விரிவடைந்துள்ளது. அதற்கேற்ப வழிகாட்டு நெறிமுறைகள் மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகிறது.


புதிய நெறிமுறைகளின்படி, குழந்தை நட்சத்திரங்கள் தொடர்ந்து, 27 நாட்களுக்கு மேல் பணியாற்றக் கூடாது. அவர்களுக்கு போதிய ஓய்வு அளிக்கப்பட வேண்டும்.பள்ளியில் இருந்து சிறப்பு அனுமதி பெற்று வந்தாலும், அவர்களுக்கு தேவையான கல்வி கிடைப்பதை, தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உறுதி செய்ய வேண்டும்.


எந்தெந்த காட்சிகளில் நடிக்கலாம்?


இந்தத் துறையில் ஈடுபடும் குழந்தைகளுக்கான வருவாயில், 20 சதவீதத்தை நிரந்தர வைப்புத் தொகையில் முதலீடு செய்ய வேண்டும். படப்பிடிப்பு நடக்கும் பகுதியில் உள்ள மாவட்ட கலெக்டரிடம் முன் அனுமதி பெற்றே, குழந்தைகளைப் பயன்படுத்த வேண்டும்..


புகைப்பிடிப்பது உள்ளிட்ட சமூகத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் வகையில், இந்தக் குழந்தைகளுக்கு காட்சிகள் அமைக்கக் கூடாது. அவர்களுடைய வயது மற்றும் மனமுதிர்ச்சிக்கு ஏற்ற காட்சிகளில் பயன்படுத்தலாம். உடல் மற்றும் மன ரீதியில் பாதிப்பு ஏற்படும் காட்சியில் பயன்படுத்தக் கூடாது. இந்த வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை, தயாரிப்பு நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். 


மேலும், மூன்று வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை நடிக்க வைக்க மாவட்ட ஆட்சியரிடம் தயாரிப்பாளர்கள் அனுமதி பெற வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்