Nipah Virus: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸால் இரண்டு பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வருகிறது. இதன் காரணமாக இரண்டு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நிபா வைரஸ் எப்படி பரவுகிறது அதன் அறிகுறிகள் என்னென்ன, அதற்கு என்ன சிகிச்சை என்பது குறித்து பார்க்கலாம்.
நிபா வைரஸ்:
நிபா வைரஸ் (NiV) என்பது ஜூனோடிக் வைரஸ் ஆகும், அதாவது இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. இது முதலில் 1998 இல் மலேசியா மற்றும் சிங்கப்பூரில்தோன்றியது. அப்போது, இந்த நிபா வைரஸ் பன்றிகளை பாதித்தது. அதைத் தொடர்ந்து, நாய்கள், பூனைகள், ஆடுகள் உள்ளிட்ட வீட்டு விலங்குகளிடம் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்பிறகு, இந்த வைரஸானது 1998இல் மலேசியாவில் மனிதர்களிடம் கண்டறியப்பட்டது. எனவே இந்த நிபா வைரஸ் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்தானது என்று தெரிகிறது. இந்த நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட வௌவால்கள் (Bats) மூலம் மனிதர்களுக்கோ அல்லது பிற விலங்குகளுக்கோ பரவுகின்றது. பாதிக்கப்பட்ட விலங்குடன் இல்லது அதன் உடல் திரவங்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தால் இந்த வைரஸ் பரவும் அபாயம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட நபர் மூலம் மற்றொரு நபருக்கு இந்த வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்று தெரிகிறது.
அறிகுறிகள் என்ன?
நிபா வைரஸின் அறிகுறிகள் பொதுவாக 4-14 நாட்களுக்குள் தோன்றும். சுவாச பிரச்சனைகள், காய்ச்சல், தலைவரி, இருமல், வாந்தி, மயக்கம் போன்றவை இதன் அறிகுறிகளாகும். நோயை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் வலிப்பு கூட ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, நிபா தொற்று நோயாளிகளின் இறப்பு 40 சதவீத முதல் 75 சதவீதம் வரை உள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
நிபா வைரஸ் என்பது ஒருவரிடம் இருந்து ஒருவரை தொடுதல் மூலமாக எளிதில் பரவக்கூடிய அபாயங்கள் இருக்கிறது. நிபா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் தனி அறையில் சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த வைரஸ் வராமல் தடுப்பதற்கு தடுப்பூசிகளும், பிரத்யேக மருந்தும் இதுவரை கண்டுபிடிக்காமல் இருப்பதால் வைரசால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வது மிகவும் முக்கியம். நோயாளியிடம் இருந்து இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை நன்றாக சோப்புகளால் அடிக்கடி சுத்தம் செய்வது, முகக் கவசம் அணிவது மிகவும் முக்கியம். இந்த வைரசை மூக்கு மற்றும் தொண்டையில் உள்ள சளி மாதிரிகளில் இருந்தும், ரத்தம் மற்றும் சிறுநீரில் இருந்தும் மேற்கொள்ளப்படும் சோதனைகள் மூலம் உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.