கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸால் இரண்டு பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், கேரள சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து இறந்த நபர்களின் மாதிரிகள் மற்றும் நிபா வைரஸ் தொற்று போன்ற அறிகுறிகளுடன் சிகிச்சையில் உள்ளவர்களின் மாதிரிகளை இறுதி சோதனை நடத்தி உறுதிப்படுத்தலுக்காக புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு (என்.ஐ.வி) அனுப்பப்பட்டுள்ளன.
தொடந்து, நிலைமையை ஆய்வு செய்ய உயர்மட்டக் கூட்டத்திற்கு இன்று காலை கோழிக்கோடு சென்றடைந்த சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ், மாலைக்குள் மாதிரிகளின் ஆய்வக முடிவுகள் கிடைக்கும் என்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தார். மேலும், காய்ச்சலால் (மூளையழற்சி) இறந்த இரு நபர்களின் மாதிரிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அதிக ஆபத்துள்ள பிரிவில் உள்ளவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும். நிபா உறுதி செய்யப்பட்டால், தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் சமூகக் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்தார்.
உண்மையில் நிபா வைரஸ் பாதிப்பா..?
கோழிக்கோட்டில் உள்ள அதே மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி ஒரு நோயாளியும், மற்றொரு நோயாளி செப்டம்பர் 11ம் தேதியும் இறந்ததாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களின் நான்கு பேர், இறந்தவரிடம் கண்டறியப்பட்ட அறிகுறிகளுடன் சிகிச்சை உள்ளனர். அதில், ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியின்படி, ஆகஸ்ட் 30 ஆம் தேதி 49 வயதுடைய நபரின் முதல் மரணம் நிகழ்ந்ததாக மாவட்ட மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். 40 வயது ஆணின் இரண்டாவது மரணம் நேற்று நிகழ்ந்தது. இருவருக்கும் காய்ச்சல் மற்றும் நிமோனியா போன்ற அறிகுறிகள் இருந்தன. இறந்தவர்களின் மாதிரிகளை சுகாதார அதிகாரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நிபா வைரஸ்:
தென்னிந்தியாவில் முதல் நிபா வைரஸ் (NiV) பாதிப்பானது கோழிக்கோடு மே 19, 2018 அன்று பதிவாகியது. நோயாளிகளில் ஒருவருக்கு சிகிச்சையளித்த செவிலியர் உட்பட சுமார் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று காரணமாக அதிகபடியான இறப்புகள் பதிவாகியுள்ளன. 2021 ஆம் ஆண்டில், 12 வயது சிறுவன் ஒருவன் வைரஸால் உயிர் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக சுகாதார அமைப்பு (WHO) படி, நிபா வைரஸ் தொற்று ஒரு ஜூனோடிக் நோய். இது விலங்குகளிடமிருந்து மக்களுக்கு பரவுகிறது என்றும், அசுத்தமான உணவு மூலமாகவோ அல்லது நேரடியாக நபரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் பாதிப்பு கண்டறிய பட்டவர்களிடம் கடுமையான சுவாச நோய் மற்றும் அபாயகரமான மூளையழற்சி வரை பல்வேறு நோய்களால் பாதிக்கப்படலாம் என்றும் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிபா வைரஸ் இறப்பு விகிதம் சுமார் 70 சதவிகிதம் ஆகும். இதுவரை இந்த வைரஸுக்கு தடுப்பூசி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.