வட கிழக்கு இந்தியாவில் அமைந்துள்ள மாநிலங்களுக்கிடையே மோதல் சம்பவங்கள் வெடிப்பது வழக்கமாகிவிட்டது.
கடந்தாண்டு, அஸ்ஸாம், மிசோரம் எல்லை பகுதியில் நடந்த வன்முறை சம்பவத்தில் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ஐந்து காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
இதனை தொடர்ந்து, கடந்த வாரம், அஸ்ஸாம் - மேகாலயா எல்லை அருகே உள்ள மேற்கு ஜெயின்டியா மலை பகுதியில் முக்ரோஹ் என்ற இடத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில், வனத்துறை அதிகாரி உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.
இப்படி, வன்முறை சம்பவங்கள் நடப்பதற்கு மாநிலங்களிக்கையே நிலவும் எல்லை பிரச்னைதான் காரணமாக உள்ளது.
வட கிழக்கு மாநிலங்களில் நாகாலாந்தை பொறுத்தவரையில், அந்த மாநிலத்தை இரண்டு மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
இந்நிலையில், நாகாலாந்தில் இருந்து பிரிந்து செல்ல விரும்பும் ஆறு மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவின் தலைவர்கள் டிசம்பர் 3 ஆம் தேதி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் மாநில கோரிக்கை குறித்து விவாதிக்க உள்ளனர்.
இதுகுறித்து கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பின் செய்தி தொடர்பாளர் பேசுகையில், "நாகாலாந்தின் 16 மாவட்டங்களில் ஆறு மாவட்டங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து விவாதிக்க ஒரு குழுவை அமித் ஷா அழைத்துள்ளார்.
இந்த மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தும் ஆறு பெரிய பழங்குடியினர், பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்ட நிலையில் அதில் இருந்து விடுபட 'எல்லை நாகாலாந்து' உருவாக்கப்பட வேண்டும் என்று கோரி வருகின்றனர். எங்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பிரதிநிதிகள் (எம்எல்ஏக்கள்) அனைவரையும் ராஜினாமா செய்யும்படி கேட்போம்" என்றார்.
டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கும் நாகாலாந்தின் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்ன்பில் திருவிழாவில் பங்கேற்க வேண்டாம் என கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது. மாநிலத்தின் அனைத்து இன சமூகங்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியமானது இந்த ஆண்டு விழாவில் பறைசாற்றப்படும்.
ஆண்டு விழாவை கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு புறக்கணிப்பது குறித்து பேசியுள்ள அம்மாநிலத்தின் தலைமை செயலாளர் ஆலம், "அமைப்பும் தொடர்புடைய அனைத்து பழங்குடித் தலைவர்களையும் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். அவர்களிடம் இருந்து சாதகமான பதிலை எதிர்பார்த்து அரசு காத்திருக்கிறது" என்றார்.
ஆகஸ்ட் மாதம், மாநில அந்தஸ்து கோரிக்கையை தொடங்கிய கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு, நாகாலாந்தை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், 2023 சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
நாகாலாந்தில் மொத்தம் 60 சட்டப்பேரவை இடங்கள் உள்ளன. அதில், கிஃபிர், லாங்லெங், மோன், நோக்லக், ஷாமடோர், டுயன்சாங் ஆகிய ஆறு மாவட்டங்களில் 20 தொகுதிகள் உள்ளன. அதில், ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சிக்கு (என்டிபிபி) 15 எம்எல்ஏக்களும், கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கும் 4 எம்எல்ஏக்களும் உள்ளன. ஒரு எம்எல்ஏ சுயேச்சையாக உள்ளார்.
மாநில சட்டப்பேரவையில் என்டிபிபிக்கு மொத்தமாக 42 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 12 எம்எல்ஏக்களும், நாகா மக்கள் முன்னணிக்கு 4 பேரும், இருவர் சுயேச்சைகளாகவும் உள்ளனர்.