ஒடிசா சுகாதார அமைச்சர் நபா தாஸ் மீது துணை காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் மார்பில் குண்டு பாய்ந்து அவர் படுகாயம் அடைந்தார். தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மரணம் அடைந்துள்ளார்.
துணை காவல் உதவி ஆய்வாளர் கோபால் தாஸ் ஏன் துப்பாக்கியால் சுட்டார் என்பது தெரியவில்லை. அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாநில அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு அவர் உயிரிந்த சம்பவம் ஒடிசா மாநிலத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது, இவரின் அரசியல் வாழ்க்கை குறித்து பார்ப்போம்.
நபா கிஷோர் தாஸ்:
- கடந்த 2004ஆம் ஆண்டு முதல் முறையாக சட்டப்பேரவையில் தேர்தலில் களம் கண்டார். காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார். இருந்தபோதிலும், 2009ஆம் ஆண்டு முதல்முறையாக வெற்றி பெற்றார்.
- 2014ஆம் ஆண்டும், காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2019ஆம் ஆண்டு, பிஜூ ஜனதா தளம் கட்சிக்கு மாறினாலும், மூன்றாவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
- நவீன் பட்நாயக் அமைச்சரவையிலும் ஒடிசா அரசியலிலும் செல்வாக்கு மிகந்த தலைவராக திகழ்ந்தார். ஒடிசாவின் பணக்கார அமைச்சர்களில் ஒருவராகவும் இருந்தார்.
- சம்பல்பூர், புவனேஸ்வர், ஜார்சுகுடா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள வங்கிகளில் மொத்தமாக 45 லட்சம் ரூபாய் சேமித்து வைத்துள்ளார். சுமார் ₹15 கோடி மதிப்பிலான 70 வாகனங்கள் இவருக்கு சொந்தமாக உள்ளன. இதில், 1.14 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் காரும் அடங்கும்.
- சமீபத்தில், இவர் 1.17 கிலோ தங்கம் மற்றும் 5 கிலோ வெள்ளியால் கட்டப்பட்ட மகாராஷ்டிராவின் ஷானி ஷிங்னாபூர் கோயிலுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள கலசத்தை நன்கொடையாக வழங்கியது தேசிய ஊடகங்களில் பெரும் விவாத பொருளை கிளப்பியது.
- அதேபோல, பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் நபா கிஷோர் தாஸ். 2015 சட்டப்பேரவை கூட்டம் ஒன்றில் அவர் ஆபாச படத்தைப் பார்த்து சிக்கியது மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.
- இந்த செய்தி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது காங்கிரஸுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, அவர் ஒரு வார காலத்திற்கு சட்டப்பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.