கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத்தில் நடந்த கலவரத்தை மையப்படுத்தி பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, கலவரத்திற்கும் அப்போதைய குஜராஜ் முதலமைச்சரான மோடிக்கும் உள்ள தொடர்பு குறித்து அந்த ஆவணப்படம் பேசியிருந்தது.
இதையடுத்து, சர்ச்சையை ஏற்படுத்திய பிபிசி ஆவணப்படத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களில் வெளியான பிபிசி ஆவணப்படத்திற்கான லிங் அதிரடியாக நீக்கப்பட்டது.
ஆனால், தடையை மீறி கேரளாவிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர் அமைப்பினர் அந்த ஆவணப்படத்தை திரையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டில் மக்களிடையே வேறுபாடுகளை விதைத்து பிளவுகளை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். மேலும், இம்மாதிரியான முயற்சிகள் வெற்றிபெறாது என்றும் கூறியுள்ளார்.
டெல்லி கண்டோன்மென்ட் பகுதி கரியப்பா மைதானத்தில் தேசிய மாணவர் படையினர் மத்தியில் பேசிய மோடி, இந்தியா மகத்துவத்தை அடைய ஒற்றுமை மந்திரம் மட்டுமே ஒரே வழி என்றார். தொடர்ந்து பேசிய அவர், "நாட்டின் இளைஞர்கள் காரணமாக ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நோக்கிப் பார்க்கிறது.
இளைஞர்களுக்கு பயனளிக்கும் டிஜிட்டல், ஸ்டார்ட் அப் மற்றும் புதுமை புரட்சியை அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இது இந்திய இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளுக்கான காலம். இந்தியாவின் நேரம் வந்துவிட்டது என்பது எல்லா இடங்களிலும் தெரிகிறது.
நாட்டை உடைக்க பல பொய் பிரச்சினைகள் எழுப்பப்படுகின்றன. பாரத அன்னையின் குழந்தைகளிடையே பிளவுகளை ஏற்படுத்த பல பிரச்சினைகள் எழுப்பப்படுகின்றன. இத்தகைய முயற்சிகள் இருந்தபோதிலும், இந்திய மக்களிடையே ஒருபோதும் வேறுபாடுகள் இருக்காது" என்றார்.
பாதுகாப்பு துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் குறித்து பேசிய மோடி, "முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட துப்பாக்கிகள் இப்போது நாட்டிற்குள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வேகமான உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இது இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி தரும்.
நாட்டின் மகள்களுக்கு சிறந்த வாய்ப்புகளுக்கான காலம். கடந்த எட்டு ஆண்டுகளில் பெண்களின் எண்ணிக்கை இரட்டிப்பாவதை காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகள் கண்டுள்ளன. எல்லைகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள முப்படைகளிலும் பெண்களை பணியமர்த்துவதற்கான பாதை வகுக்கப்பட்டுள்ளது.
பெண்கள் கடற்படையில் மாலுமிகளாக பணியமர்த்தப்பட்டனர். ஆயுதப்படைகளில் போர் பாத்திரங்களில் நுழையத் தொடங்கியுள்ளனர்.
முதல் கட்ட பெண் வீரர்கள் புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சியைத் தொடங்கியுள்ளனர், மேலும் 1500 பெண் மாணவர்கள் சைனிக் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல் முறையாக பெண் மாணவர்களுக்காக அவை திறக்கப்பட்டுள்ளன" என்றார்.