மைசூர் தசரா விழாவில் எட்டு முறை அம்பாரியை தூக்கி சுமந்த அர்ஜூனா என்ற யானை, மேற்கு தொடர்ச்சி மலையில் மீட்புப் பணியின்போது காட்டு யானை குத்தியதில் உயிரிழந்ததாக கர்நாடக வனத்துறையினர் தெரிவித்தனர்.
உலக புகழ்பெற்ற இந்த யானை இறக்கும்போது அதற்கு 63 வயது. கடந்த திங்கள் கிழமை கர்நாடகவை அடுத்த ஹாசன் மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான நகரமான சக்லேஷ்பூரின் யெஸ்லூர் மலைத்தொடருக்கு நான்கு காட்டு யானைகளுக்கு ரேடியோ காலரிங் பொருத்தவதற்காக அழைத்து செல்லப்பட்ட ஆறு யானைகளில் அர்ஜூனாவும் ஒன்றாகும்.
யசலூர் மண்டலம், சகலேஷ்பூர் தாலுகா, பாலேகெரே வனப்பகுதியில், காட்டு யானைகளை பிடித்து, இடம் மாற்றும் பணி நடந்து வந்தது. இந்நிலையில், ஹாசன் மாவட்டத்தில் மலைப்பாங்கான பகுதிகளில் மக்களை தூங்க வைக்கும் வன ஆக்கிரமிப்புக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் கடந்த நவம்பர் 24-ம் தேதி முதல் ரேடியோ காலர் கருவி பொருத்தும் பணி தொடங்கப்பட்டது. அப்போது, காட்டு யானைகளுக்கு ரேடியோ காலர் கருவி பொருத்தும்போது, திடீரென காட்டு யானைகள் தாக்க தொடங்கியது. உடன் வந்த மற்ற 5 யானைகள் தப்பி ஓடிய நிலையில், அர்ஜூனா யானை மட்டும் தனி ஒரு ஆளாய் நின்று காட்டு யானைகளை எதிர்த்து போராடியது.
அர்ஜூனா மீது அமர்ந்திருந்த யானை பாகனும் ஒரு கட்டத்தில் இறங்கி ஓட, விடாது அர்ஜூனன் ஆத்திரமடைந்து போராட தொடங்கியது. மிருகத்தனமான இந்த சண்டை 15 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது. இந்த சண்டையை நிறுத்த வன காவலர்கள் வானத்தை நோக்கி சுட்டனர். இருப்பினும், சண்டை நீடித்த நிலையில், காட்டு யானை ஒன்று தனது தந்தத்தால் அர்ஜூனனின் வாய் மற்றும் வயிற்று பகுதியில் குத்த, அந்த இடம் இரத்த காடாய் மாறியது. தொடர்ந்து உயிருக்கு போராடிய அர்ஜூனன் தனது உயிரை தியாகம் செய்தது. சம்பவ இடத்திற்கு வனத்துறை உயர் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
வனவிலங்கு பாதுக்காப்புச் சட்டம், 1972ம் படி, தற்காப்புக்காக ஒரு விலங்கை சுடுவதற்கு விதிவிலக்கு அளித்தாலும், வனத்துறை அதிகாரிகள் யாரும் தங்கள் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி அர்ஜூனனை காப்பாற்றவில்லை.
முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி இரங்கல்:
முன்னாள் முதல்வர் எச்டி குமாரசாமி அர்ஜுனனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “ஹாசன் மாவட்டம் சகலேஷ்பூர் தாலுகாவில் யசலூர் அருகே காட்டு யானைகளை பிடிக்கும் நடவடிக்கையின் போது, காட்டுயானைகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அர்ஜுனன் என்ற யானை வீர மரணம் அடைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.” என தெரிவித்தார்.
அர்ஜூனா யானை செய்தது என்ன..?
- 1961ம் ஆண்டு பிறந்த யானை 7 ஆண்டுகளுக்குப் பிறகு கக்கனாகோட் காடுகளில் கெடா பகுதியில் வனத்துறை அதிகாரிகளால் பிடிப்பட்டது.
- 1990 ம் ஆண்டு மைசூர் தசரா ஊர்வலத்தில் பங்கேற்ற அர்ஜூனன் யானை, 2012 முதல் 2019 வரை தொடர்ந்து எட்டு ஆண்டுகள் இந்து தெய்வமான சாமுண்டேஸ்வரியின் சிலையை வைத்திருந்த 750 கிலோ எடையுள்ள தங்க சிம்மாசனத்தை சுமந்தது.
- தனது 60வது வயதில் தசரா மைதானத்தில் இருந்து அர்ஜூனன் ஓய்வுபெறவே, இந்த பணியில் அபிமன்யு யானை மாற்றப்பட்டது.