ஐந்து மாநில தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கிய தேர்தல் பல்வேறு கட்டமாக நடத்தப்பட்டது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. மிசோரம் மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின.


ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்:


ஐந்து மாநில தேர்தலில் பாஜக, பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியும் மிசோரத்தில் ஜோரம் மக்கள் இயக்கமும் ஆட்சியை பிடித்துள்ளது. 
மக்களவை தேர்தல் நடக்க இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


4 மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளதால், எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ஏன் என்றால், INDIA கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கு, நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் தொகுதிகள் ஒதுக்கவில்லை. தெலங்கானாவை தவிர்த்து 4 மாநிலங்களிலும் தனித்தே களம் கண்டது.


குறிப்பாக, மத்திய பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்த்தபோதிலும், அக்கட்சிக்கு காங்கிரஸ் ஒரு தொகுதி கூட ஒதுக்கவில்லை. இதுகுறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், வெளிப்படையாகவே தனது அதிருப்தியை பதிவு செய்திருந்தார்.


INDIA கூட்டணியின் கூட்டம் ஒத்திவைப்பு:


இச்சூழலில், நாளை நடைபெறவிருந்த INDIA கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டணி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய ஜனதா கட்சி தலைவரும் பிகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என அறிவித்தனர்.


இப்படிப்பட்ட சூழலில், INDIA கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மெகா கூட்டணியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியவர் நிதிஷ் குமார். 


தங்களுக்கு பதிலாக நிதிஷ் குமாரும் அகிலேஷ் யாதவும் கட்சி பிரநிதிகளை அனுப்ப உள்ளதாகக் கூறப்படுகிறது. ஐக்கிய ஜனதா தள தலைவர் ராஜீவ் ரஞ்சன், கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ஜா ஆகியோர் நிதிஷ் குமாருக்கு பதிலாக கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில், உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், மாநிலங்களவை உறுப்பினர் ராம்கோபால் யாதவை அனுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.