மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தின் பூமிக்கு அடியில் மர்ம ஒலி கேட்பதாக அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்


மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் உள்ளது ஹசோரி கிராமம். இது கில்லாரியில் இருந்து 28கிமீ தொலைவில் உள்ளது. இந்த கிராமத்தில் தற்போது ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. அதாவது கடந்த 6ம் தேதி முதல் அந்த கிராமத்தின் பூமிக்கு அடியில் மர்மமான சத்தங்கள் கேட்பதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கிராம மக்கள் அச்சத்திலும், குழப்பத்திலும் உள்ளனர். ஏற்கெனவே அந்த பூமி 9700க்கும் அதிகமானவர்களை பலி வாங்கியதாக பழைய கதையையையும் நினைவு கூர்ந்துள்ளனர்


நிலநடுக்கம்..


மர்ம சத்தத்துக்கு ஏற்கனவே இங்கு ஏற்பட்ட கொடூர நிலநடுக்கம் காரணமாக இருக்கலாம் என ஊர்மக்கள் குறிப்பிட்டுள்ளனர். 1993ம் ஆண்டு அப்பகுதியில் மிகவும் பலம் வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தில் அம்மாவட்டத்தில் கிட்டத்தட்ட 9700 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அண்மைக்காலமாக இப்பகுதியில் நில அதிர்வுகள் எதுவும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஆனால் லத்தூரில் செப்டம்பர் 30 1993ம் தேதி ரிக்டர் அளவுகோலில் 6.2 அளவுக்கு நிலநடுக்கம் பதிவானது. இதில் 10 கிராமங்கள் தரைமட்டமானது. கிட்டத்தட்ட 9700 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. நிலநடுக்கம் 10கிமீ ஆழத்தில் ஏற்பட்டபோதும் இந்த இடத்தில் இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்ட என்ன காரணம் என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் அதே பகுதியில் சத்தம் என புது தகவல் கிளம்பியது மக்களிடையே பீதியை உண்டாக்கியுள்ளது.




ஆய்வு..


பொதுமக்களின் பயத்தைப் போக்கவும், குழப்பத்தை தீர்க்கவும் மாவட்ட நிர்வாகம் அப்பகுதியில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. புவி காந்தவியல் நிபுணர்கள் பலரும் பூமியில் ஏதேனும் சத்தம் கேட்கிறதா என்ற ஆய்வை தொடர்ந்து செய்து வருகின்றனர். ஆனால் இதுவரை அப்பகுதியில் அப்படி ஏதும் சத்தம் கேட்டவில்லை என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அப்பகுதிக்கு நேரடியாக சென்ற லத்தூர் மாவட்ட ஆட்சியர் பிரித்விராஜ், தொடர்ந்து ஆய்வுகள் நடப்பதால் மக்கள் பீதியடைய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.