மூத்த தலைவர்கள் திகம்பர் கமத், மைக்கேல் லோபோ உள்பட கோவாவைச் சேர்ந்த எட்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இன்று இணைந்தனர். இதன் காரணமாக, சட்டப்பேரவையில் எதிர்கட்சியான காங்கிரஸின் பலம் மூன்று ஆக குறைந்துள்ளது. முன்னதாக, இரண்டு மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணையும் திட்டம் முறியடிக்கப்பட்டது. 


இருப்பினும், இந்த முறை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வரும் நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறி இருப்பது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில், முதலில் உங்களையை ஒற்றுமையாக வைத்து கொள்ளுங்கள் என பாஜக காங்கிரஸை சாடியுள்ளது.


கட்சியின் பலத்தில் மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள், அதாவது எட்டு எம்எல்ஏக்கள் குழுவாக பிரிந்து பாஜகவில் இணைந்திருப்பதால், அவர்களை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய முடியாது. இவர்களில் மைக்கேல் லோபோவின் மனைவி டெலிலா லோபோ, ராஜேஷ் பால்தேசாய், கேதார் நாயக், சங்கல்ப் அமோன்கர், அலிக்சோ செக்வேரா மற்றும் ருடால்ப் பெர்னாண்டஸ் ஆகியோர் அடங்குவர்.


'ஆபரேஷன் கமலா' (பாஜகவின் சின்னம்) என்ற பெயரில் எதிர்கட்சி எம்எல்ஏக்களை பாஜக விலை கொடுத்து வாங்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், கோவாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி விட்டு கட்சி தாவியுள்ளனர். கோவாவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் உள்ள கோவா முற்போக்கு கட்சி, "இந்திய ஒற்றுமை பயணத்தால் அதிர்ந்து போயுள்ளதால், மத்திய புலனாய்வு அமைப்புகள், குண்டர்களின் மிரட்டல்கள், பண மோகம் போன்ற அனைத்து வகையான யுக்திகளையும் பாஜக பயன்படுத்தியது" என விமர்சனம் மேற்கொண்டுள்ளது.


ஜூலை மாதத்திலேயே, திகம்பர் கமத், மைக்கேல் லோபோ உள்ளிட்டோர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவர்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு காங்கிரஸ் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. எதிர்கட்சி தலைவர் பதவியிலிருந்து மைக்கேல் லோபோவை காங்கிரஸ் நீக்கியது. ஆனால், பின்னர், அந்த பொறுப்பில் வேறு யாரும் நியமிக்கப்படவில்லை.


சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறாத நிலையிலும், இன்று காலை சபாநாயகரை எம்எல்ஏக்கள் சந்தித்தால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர்தான், மாநில பாஜக தலைவர் சதானந்த் ஷெட் தனவாடே அவர்கள் கட்சியில் இணைவதை உறுதி செய்தார். 


இன்று கமத் பேசுகையில், "நாங்கள் காங்கிரஸில் அதிருப்தியில் இருக்கிறோம். குலாம் நபி ஆசாத்துக்கு என்ன நடந்தது என்பதை நாங்கள் பார்த்தோம். மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவோம்" என்றார்.


முன்னதாக, 2019ஆம் ஆண்டு, காங்கிரஸ் கட்சியின் 15 எம்எல்ஏக்களில் 10 பேர், அதாவது மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள், பாஜகவில் இணைந்தனர். இதன் காரணமாகவே, இந்தாண்டு தேர்தலுக்கு முன்பு, ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் வேட்பாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்.