கர்நாடகா மாநிலம், பெல்காம் பகுதியில் விசித்திரமான பலூன் ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டம், கடிகரவினகோப்பா எனும் கிராமத்தில், வயல்வெளியில் இந்த விசித்திரமான பலூன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்திலான இந்த பலூனை கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அந்த பலூனை கைப்பற்றி சோதனைக்கு அனுப்பியுள்ளனர். எங்கிருந்து இந்த பலூன் வந்தது? எப்போது அது பறந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு காவல்துறை உயர் அதிகாரிகளும் வந்து விசாரணை நடத்தினர். வெள்ளை நிற பலூனை உடைத்து பார்த்த போது அதன் உள்ளே மின்சாதன கருவிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சாதனத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த ’க்ரா’ என்ற நிறுவனத்தின் பெயர் எழுதப்பட்டிருந்தது தெரிய வந்தது.
க்ராவ் ரேடியோஸொண்டஸ் நிறுவனமானது வானிலை தொடர்பான கருவிகளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுவருகிறது. ஜெர்மனி, கொரியா மற்றும் சீனாவில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கர்நாடகாவில் கண்டெடுக்கப்பட்ட பலூனில் இருந்த கருவிகள் க்ராவ் நிறுவனம் ஆய்வுக்காக அனுப்பிய சாதனமாக இருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கருவிகள் சோதனைக்காக அனுப்பப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கண்டெடுக்கப்பட்ட DFM -09 என்ற மாடல் கொண்ட சாதனமானது, வெப்பநிலை, ஈரப்பதம், காற்றழுத்தம், காற்றின் திசை மற்றும் காற்றின் வேகம் ஆகியவற்றின் துல்லியமான மற்றும் நம்பகமான அளவீட்டுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் சென்ற மாதம் அமெரிக்காவின் அணு ஆயுத ஏவு தளத்திற்கு மேல் சீனாவின் உளவு பலூன் ஒன்று பறந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளின்கன் சீன தலைநகர் பீஜிங்குக்கு செல்வதற்கு ஒரு நாள் முன் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.