திரிபுராவில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி சட்டப்பேரவை நடைபெற்றது. அதற்கான முடிவுகள், மார்ச் 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. பாஜக 32 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. ஆனால், அங்கு தேர்தலை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மோசமான வன்முறை சம்பவங்கள் அரங்கேறி இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்கள்:


இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்ய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் அடங்கிய எட்டு பேர் கொண்ட குழு, உண்மை கண்டறியும் நோக்கத்திற்காக திரிபுராவுக்கு சென்றுள்ளது.


மார்ச் 12ஆம் தேதி வரை, இந்த குழு மாநிலத்தில் தங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, வன்முறை சம்பவம் தொடர்பாக அறிக்கையை சமர்ப்பித்து, மார்ச் 13 முதல் கூடும் நாடாளுமன்ற கூட்டத்தில் இந்த பிரச்சினையை எழுப்பும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி பினோய் விஸ்வம் நேற்று ட்வீட் செய்திருந்தார்.


உண்மை கண்டறியும் குழு:


இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பபித்ரா கர் கூறுகையில், "பாதிக்கப்பட்ட மேற்கு திரிபுரா, செபாஹிஜாலா மற்றும் கோவாய் மாவட்டங்களுக்குச் செல்வதற்காக உண்மை கண்டறியும் குழு மூன்று குழுக்களாகப் பிரிக்கப்படும்.


மார்ச் 2 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து மாநிலத்தில் 1,200 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து, எண்ணற்ற சம்பவங்கள் நடந்ததால், காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் சேதத்தின் அளவை துல்லியமாக கண்டறிய முடியவில்லை.


தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகள் குறித்த உண்மையான அறிக்கையைத் தொகுக்கும் செயல்முறை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது" என்றார்.


வன்முறை சம்பவங்கள் எங்கு எல்லாம் நடைபெற்றது என்பதை விளக்கி பேசிய சட்டம் ஒழுங்கு துணை ஐஜி ஜோதிஷ்மன் தாஸ் சவுத்ரி, "தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை வழக்குகளில் பெரும்பாலானவை செபாஹிஜாலா மற்றும் கோவாய் மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளன. அங்கு சிலர் காயமடைந்து அருகிலுள்ள சுகாதார நிலையத்திற்கு மாற்றப்பட்டனர்" என்றார்.


இதற்கிடையே, திரிபுராவின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள மாணிக் சாஹா, இன்று ஜிபிபி மருத்துவமனையில் காயமடைந்த நபர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அமைதியைக் காக்கும் வகையில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.


திரிபுரா தேர்தலில், திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜக தேர்தலை சந்தித்தது. இதில், ஆட்சியை தக்க வைத்துள்ள பாஜக, கூட்டணி கட்சியான திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணிக்கு ஒரு அமைச்சர் பதவியை வழங்கியது.


முதலமைச்சர் பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.