இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஜெய்ப்பூரில் உள்ள இனிப்பு கடைகள் எடுத்த முடிவு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. மைசூர் பாக்கின் பெயரை மாற்றி, 'மைசூர் ஸ்ரீ' என புதிய பெயர் சூட்டியுள்ளனர் இனிப்பு கடை உரிமையாளர்கள்.

பொங்கி வழியும் தேசப்பற்று:

கடந்த மாதம், ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்தியா ராணுவம் தாக்குதல் நடத்தியது.

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை கதிகலங்க வைத்தது இந்தியா. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தி 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்றது இந்தியா. இந்த ராணுவ நடவடிக்கை உலக நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதனால், இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு, தாக்குதலை நிறுத்தி கொள்வதாக இரு நாடுகள் அறிவித்தன.

மோதல் நின்றாலும் இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழலே நிலவி வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஜெய்ப்பூரில் உள்ள இனிப்பு கடைகள் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளனர். மைசூர் பாக்கின் பெயரை மாற்றி பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

மிரண்டு போன பாகிஸ்தான்:

இதுகுறித்து கடை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், "எங்கள் இனிப்புப் பொருட்களின் பெயர்களில் இருந்து 'பாக்' என்ற வார்த்தையை நீக்கியுள்ளோம். 'மோதி பாக்' என்பதை 'மோதி ஸ்ரீ' என்றும், 'கோண்ட் பாக்' என்பதை 'கோண்ட் ஸ்ரீ' என்றும், 'மைசூர் பாக்' என்பதை 'மைசூர் ஸ்ரீ' என்றும் பெயர் மாற்றியுள்ளோம்" என்றார்.

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இனிப்புகளின் பெயரில் உள்ள 'பாக்' என்ற சொல் பாகிஸ்தானைக் குறிக்கவில்லை. கன்னடத்தில் 'பாக்' என்பதற்கு இனிப்பு என்று பொருள். 

இனிப்பு கடைகளின் முடிவை விமர்சித்த இந்திய மொழியியலாளரும் விரிவுரையாளருமான அபிஷேக் அவ்டான்ஸ், "மைசூர் பாக், மோதி பாக், ஆம் பாக் போன்றவற்றில் உள்ள பாக் என்பது கன்னட மொழி வார்த்தை. அதற்கு இனிப்பு என்பது அர்த்தம். யார் இதை அவர்களுக்குச் சொல்லப் போகிறார்கள்" என எக்ஸ் தளத்தில் சாடியுள்ளார்.