நாட்டின் குடியரசு தலைவராக திரௌபதி முர்மு இன்று காலை 10:15 மணிக்கு பதவியேற்று கொண்டார். இதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் உரையாற்றிய அவர், குடியரசு தலைவராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது கோடிக்கணக்கான பெண்களின் கனவையும் திறனையும் பிரதிபலிக்கிறது என்றார்.


விரிவாக பேசிய அவர், "இந்தியர்களின் விருப்பங்கள், எதிர்பார்ப்புகள், உரிமைகள் ஆகியவற்றின் சின்னமாக திகழும் நாடாளுமன்றத்தில் நின்று கொண்டிருக்கிறேன். அதற்காக, தாழ்மையுடன் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த புதிய பொறுப்பை ஏற்று வழி நடத்த உங்களின் நம்பிக்கையும் ஆதரவும் பெரும் பலமாக இருக்கும்.


சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் குடியரசு தலைவர் நான். சுதந்திர இந்தியாவின் குடிமக்கள் மீது சுதந்திர போராட்ட வீரர்கள் வைத்திருந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய நமது முயற்சிகளை விரைவாக்க வேண்டும்.


குடியரசு தலைவர் பதவியை அடைந்திருப்பது எனது தனிப்பட்ட சாதனை அல்ல. இந்தியாவில் உள்ள அனைத்து ஏழை மக்களின் சாதனை இது. ஏழை மக்கள் கனவு காண்பது மட்டும் இன்றி அதை நிறைவேற்றவும் முடியும் என்பதற்கு எனது தேர்வே சாட்சி.


பல ஆண்டுகளாக வளர்ச்சி இல்லாமல் இருந்த ஏழைகள், தலித்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், என்னைத் அவர்களின் பிரதிபலிப்பாகப் பார்க்க முடிகிறது என்பது எனக்கு திருப்தி அளிக்கிறது. எனது நியமனத்திற்கு பின்னால் ஏழைகளின் ஆசீர்வாதம் உள்ளது. இது கோடிக்கணக்கான பெண்களின் கனவுகள் மற்றும் திறனை பிரதிபலிக்கிறது" என்றார்.


 






இதையடுத்து, குடியரசு தலைவர் மாளிகையில் அளிக்கப்பட்ட மரியாதையை அவர் ஏற்று கொண்டார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார்.