குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), தேசிய மக்கள் தொகை பதிவேடு (NRC) ஆகியனவற்றால் முஸ்லிம்களுக்கு எவ்வித இழப்பும் ஏற்படாது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். அசாம் மாநிலத்துக்கு அவர் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அசாம் தலைநகர் குவாஹாத்தியில் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு பேசியதாவது, “குடியுரிமை திருத்தச் சட்டத்தால்இந்தியாவில் ஒரு ஒரே முஸ்லிமுக்குக் கூட பாதிப்பு ஏற்படாது. சிலர் அரசியல் ஆதாயத்துக்காக சிஏஏ(CAA) மற்றும் என்ஆர்சி (NRC) மீது தவறான மதவாத சித்தரிப்புகளை முன்னெடுக்கின்றனர். இந்தியாவுக்கு யாரும் மதச்சார்பின்மை, சமூகநீதி, ஜனநாயகம் குறித்து பாடம் எடுக்கத் தேவையில்லை. இவை நமது கலாச்சாரம். மேலும் இவை நம் ரத்ததிலேயே இருக்கின்றது. தேசம் இவற்றை நடைமுறைப்படுத்திக் கொண்டே இருக்கிறது. ஆகையால் இந்த பண்புகள் என்றும் உயிர்ப்புடன் இருக்கிறது.பொறுப்பான குடிமக்களாக நாம் அரசியலை உணர்ந்து கொள்ள வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியனவற்றின் மீது மதச்சாயம் பூசுவோரிடம் நாம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்” என்று பேசினார்.
நிகழ்ச்சியில், அவர் 'Citizenship Debate over NRC and CAA -- Assam and the Politics of History' என்ற புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் பேசிய அவர், நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் நம் தேசத்தின் முதல் பிரதமர் சிறுபான்மையினர் நலன் பாதுகாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அது இன்றளவும் இங்கே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் அத்தகைய நிலைமை இல்லை. குடியுரிமை சட்டத் திருத்தம் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு நல்கும். ஏன் அண்டை நாடுகளில் இருந்து இங்கே தஞ்சம் புகும் சிறுபான்மையினருக்கும் கூட பாதுகாப்பைக் கொடுக்கும். இயற்கைப் பேரிடரின்போது நாங்கள் அண்டை நாடுகளுடன் தொடர்பில் இருக்கிறோம். அண்டை நாட்டில் ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படும் போது அங்குள்ள மக்கள் இங்கு வர விரும்பினால் நாங்கள் அவர்களுக்கு உதவுகிறோம். எதிர்காலத்திலும் நிச்சயமாக உதவி செய்வோம்.
தேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது அனைத்து நாடுகளுக்குமே அவசியமானது. இது தற்போது அரசாங்கத்தின் கையில் உள்ளது. ஆனால் சிலர் இதில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக மதச் சாயம் பூசுகின்றனர்.
எனவே குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), தேசிய மக்கள் தொகை பதிவேடு (NRC) ஆகியனவற்றால் முஸ்லிம்களுக்கு எவ்வித இழப்பும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இரண்டு நாள் பயணமாக அசாம் சென்றுள்ள ஆர்எஸ்எஸ் தலைவருடன் அசாம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா மற்றும் மணிப்பூர் மாநிலங்களைச் சேர்ந்த ஆரஎஸ்எஸ் பிரமுகர்கள் சந்திப்பு நடத்தி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.