அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு இஸ்லாமிய பெண் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் சம்பவம் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது. அதனைப் பற்றி காணலாம். 


ஒட்டுமொத்த இந்தியாவும் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு விழாவை தான் உற்றுநோக்கியுள்ளது. நாளை குடமுழுக்கு நடக்கவுள்ள நிலையில் இந்திய மக்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர். ஒவ்வொரு மாநிலங்களிலும் ராமர் கோயில் குடமுழுக்கு நேரலை செய்யப்படுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையம் மற்றும் புனரமைக்கப்பட்ட ரயில் நிலையம் என பல விஷயங்கள் அயோத்திக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 


நாளை நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு இந்தியா மற்றும் உலக நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 23 ஆம் தேதி முதல் பொதுமக்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாநிலங்களில் பொது விடுமுறையும், அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் ஐந்து வயது குழந்தை ராமர் தாமரையின் மீது நிற்பது போன்று சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.  


இதனை கர்நாடகாவின் பிரபல சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கியுள்ளார். இப்படியான நிலையில் அயோத்தி நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இப்படியான நிலையில் அயோத்திக்கு மும்பையில் இருந்து நடைபயணம் மேற்கொண்டுள்ள இஸ்லாமிய பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது. அங்குள்ள ஷப்னம் என்ற பெண் கடந்த 3 வாரத்துக்கு முன் இந்த நடைபயணத்தை தொடங்கினார். கிட்டதட்ட 1,425 கிலோ மீட்டர் தூரத்தை தனது நண்பர்கள் ராமன்ராஜ் மற்றும் வினீத் பாண்டே உடன் கடந்து வருகிறார். 


இதனிடையே தன்னுடைய அயோத்தி பயணம் பற்றி ஷப்னம் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘நான் இஸ்லாமியராக இருந்தாலும் எனக்கு ராமர் மீது அசைக்க முடியாக பக்தி உள்ளது. அவரை வணங்க இந்துவாக இருக்க வேண்டியதை விட ஒரு நல்ல மனிதனாக இருப்பது தான் முக்கியம். தினமும் 25 முதல் 30 கிலோ மீட்டர் நடந்து வரும்  ஷப்னம் மும்பை -அயோத்தி இடையிலான தூரத்தை ஒன்றரை மாதத்தில் கடப்பார் என்பதால் பிப்ரவரி முதல் வாரம் அவர் தரிசனம் செய்ய வாய்ப்புள்ளது. அவர் செல்லும் இடமெல்லாம் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுவதால் தனது பயணத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஷப்னம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். 




மேலும் படிக்க: Ayodhya Ram Mandir: விண்ணில் இருந்து! ரம்மியமாக காட்சி தரும் அயோத்தி ராமர் கோயில் : இஸ்ரோ வெளியிட்ட க்ளிக்!