அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு மும்பையில் உள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீடு விழாக்கோலம் பூண்டுள்ளது.
பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட ராமர் கோயில் நாளை திறக்கப்பட உள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள மக்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் மற்றும் உலக நாடுகளைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் அயோத்திக்கு வருகை தந்துள்ளனர்.
ராமர் கோயில் வளாகத்திற்குள், மகரிஷி வால்மீகி, மகரிஷி வசிஷ்டர், மகரிஷி விஸ்வாமித்ரா, மகரிஷி அகஸ்தியர், நிஷாத் ராஜ், மாதா ஷப்ரி மற்றும் தேவி அஹில்யாவின் மரியாதைக்குரிய மனைவி ஆகியோருக்கு என பிரத்யேக கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு குழந்தை வடிவ ராமர் சிலை வைக்கப்படுகிறது.
இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே கோயில் திறப்பு உள்ள நிலையில், அயோத்தியில் திரும்பும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஒவ்வொரு வீடுகளிலும் ராமர் கோயில் திறப்பு பற்றிய மகிழ்ச்சியான சூழல் நிலவும் நிலையில், உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி வீடும் களைகட்டியுள்ளது. மகாராஷ்ட்ரா மாநிலம் தெற்கு மும்பையிலுள்ள இந்த வீடு ஆண்டாலியா என்றழைக்கப்படுகிறது. மொத்தம் 27 மாடிகளைக் கொண்டுள்ள இந்த வீடு சுமார் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதில் லிஃப்ட், தியேட்டர், மிகப்பெரிய கார் பார்க்கிங், நீச்சல் குளம், ஸ்பா, ஹெல்த் செண்டர் என அனைத்து வகையான வசதிகளும் உள்ளது.
இந்த வீட்டில் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டின் மேல் தளத்தில் விளக்குகள் பொருத்தப்பட்டு “ஜெய் ஸ்ரீராம்” என எழுதப்பட்டுள்ளது. மேலும் ராமர் கோயில் படமும் இடம் பெற்றுள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஏற்கனவே ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு முகேஷ் அம்பானியும், அவரது மனைவி நீதா அம்பானியும் அழைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Watch Video : பளிங்கு தரைகளும், ஜொலிக்கும் தூண்களும்! கண்ணை கவரும் அயோத்தி ராமர் கோயில் வீடியோ!