கோலாப்பூரில் இருந்து மும்பைக்குச் செல்லும் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலில் முஸ்லீம் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. புதிதாகப் பிறந்த குழந்தைக்கு மகாலட்சுமி என்று பெயர் வைக்க தம்பதியினர் முடிவு செய்துள்ளனர். 


ரயிலில் பிறந்த பெண் குழந்தை:


கடந்த ஜூன் 6ஆம் தேதி, கோலாப்பூர்-மும்பை மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலில் மீரா ரோட்டைச் சேர்ந்த 31 வயதான பாத்திமா காதுன் என்ற பெண் பயணம் மேற்கொண்டார். லோனாவ்லா ரயில் நிலையத்தைக் கடந்ததும் அவருக்கு அழகான பெண் குழந்தையை பிறந்தது. 


இச்சூழலில் தான் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடைபெற்று இருக்கிறது. அதாவது ரயிலில் குழந்தை பிறந்ததால் அந்த ரயிலின் பெயரான மகாலட்சுமி என்ற பெயரையே அந்த குழந்தைக்கு வைக்க தம்பதியினர் முடிவு செய்திருக்கின்றனர்.


இது தெய்வீக சம்பவம்:


இது தொடர்பாக அந்த குழந்தையின் தந்தை தய்யாப் பேசுகையில்,"கோலாப்பூர்-மும்பை மகாலட்சுமி விரைவு ரயிலில் ஒரு பெண் குழந்தை பிறப்பது ஒரு தெய்வத்தைப் பார்ப்பது போன்றது. எனவே அவளுக்கு மகாலட்சுமி என்று பெயரிட குடும்பத்தினர் எல்லோரும் சேர்ந்து முடிவு செய்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.



பாத்திமா, தய்யாப் தம்பதிக்கு மூன்று மகன்கள். பாத்திமாவின் கடைசி  டெலிவிரி தேதி ஜூன் 20 என்பதால், ஜூன் 6 அன்று கோலாப்பூர்-மும்பை ரயிலில் குடும்பத்தினர் பயணம் செய்தனர். எனினும், திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக லோனாவலாவில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ரயில் நிறுத்தப்பட்டது.


ரயில் நிலையத்தில் வரவேற்பு:


இதற்கிடையில், இரவு 11 மணியளவில் ரயில் மீண்டும் இயங்கிய பிறகு, அவரது மனைவி பாத்திமாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்தது. ரயில் கர்ஜத் நிலையத்திற்கு வந்ததும், குடும்பத்தினர் இறங்கினர். அவர்களுக்கு கர்ஜத் ரயில் நிலைய அலுவலர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 


இது தொடர்பாக கர்ஜத் ஜிஆர்பியின் ஏபிஐ முகேஷ் தாஷ்மே கூறுகையில், "இந்த சம்பவம் குறித்து கர்ஜத் உபாசிலா மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு செவிலியர் ஷிவாங்கி சலுங்கே மற்றும் ஊழியர்கள் ரயில் நிலையத்திற்கு வந்தனர்.


மேலும் சிகிச்சைக்காக அந்த பெண்ணும் குழந்தையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்." என்றார். அதேபோல் மருத்துவமனையின் டீன் சவிதா பாட்டீல் தாயும் குழந்தையும் வீட்டிற்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக கூறினார். இஸ்லாமிய தம்பதியினர் இந்து தெய்வத்தின் பெயரை வைத்த சம்பவம் அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.


மேலும் படிக்க: Anniyur siva profile: விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா - யார் இவர்..? - முழு பின்னணி இதோ


மேலும் படிக்க: AP Capital Amaravati: முடிவுக்கு வராத தலைநகர் பிரச்சினை; முற்றுப்புள்ளி வைத்த சந்திரபாபு நாயுடு; இதுதான் முடிவு!