4ஆவது முறையாக முதல்வர்.. தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டமன்றத் தலைவராக சந்திரபாபு நாயுடு!

விஜயவாடா கன்னவரம் விமான நிலையம் அருகே அமைந்துள்ள கேசரப்பள்ளி ஐடி பூங்காவில் காலை 11:27 மணிக்கு ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்க உள்ளார்.

Continues below advertisement

ஆந்திர பிரதேச முதலமைச்சராக தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நாளை நான்காவது முறையாக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜயவாடாவின் புறநகரில் உள்ள கன்னவரம் விமான நிலையம் அருகே அமைந்துள்ள கேசரப்பள்ளி ஐடி பூங்காவில் காலை 11:27 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

Continues below advertisement

மீண்டும் முதலமைச்சராகும் சந்திரபாபு நாயுடு: விஜயவாடாவில் தெலுங்கு தேச கட்சி சட்டப்பேரவை குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கூட்டணி கட்சியான பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி எம்எல்ஏக்களும் பாஜக எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தெலுங்கு தேச கட்சி சட்டப்பேரவை குழு தலைவராகவும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராகவும் சந்திரபாபு நாயுடு தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் பேசிய சந்திரபாபு நாயுடு, "பாஜக, ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் அனைத்து எம்எல்ஏக்களும் ஆந்திராவில் அமையவிருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் முதலமைச்சராக வருவதற்கு எனக்கு ஆதரவு அளித்துள்ளனர்" என்றார்.

இதைத் தொடர்ந்து, ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக ஆந்திர ஆளுநர் அப்துல் நசீரை தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா ஆகிய கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து பேச உள்ளனர். இன்று மாலைக்குள் புதிய ஆட்சி அமைக்க ஆளுநரிடம் இருந்து அழைப்பு விடுக்கப்படலாம்.

வரலாற்று வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கட்சி: சந்திரபாபு நாயுடுவுடன் இன்னும் சில கேபினட் அமைச்சர்களும் நாளை பதவியேற்க உள்ளனர். சந்திரபாபு நாயுடுவுடன் தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளர் நாரா லோகேஷ், ஜனசேனா தலைவர் மனோகர் ஆகியோரும் பதவியேற்பார்கள் என கூறப்படுகிறது.

சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். பதவியேற்பு விழா ஏற்பாடுகளை ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் நீரப் குமார் பிரசாத் ஆய்வு செய்தார். டெல்லியில் இருந்து  நாளை காலை 8:20 மணிக்கு புறப்படும் பிரதமர் மோடி கன்னவரம் விமான நிலையத்திற்கு காலை 10:40 மணிக்கு வருகிறார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுடன் ஆந்திர மாநிலத்திற்கு சட்டப்பேரவை தேர்தலும் நடத்தப்பட்டது. அதில், பாஜக, ஜனசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.

தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி போட்டியிட்ட 21 தொகுதிகளையும் கைப்பற்றியது. பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றது. ஆளுங்கட்சியாக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்து. 11 இடங்களில் வெற்றிபெற்ற அக்கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது.

 

Continues below advertisement