கொரோனா முதல் அலையில் தந்தையை இழந்த இந்துப்பெண்ணின் திருமணத்தை தனது வீட்டில் நடத்திய இஸ்லாமிய குடும்பத்தினர். ரம்ஜான் நோன்பு காலத்தின் போது இவர்கள் மேற்கொண்ட இச்செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியா மத ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் எப்போதும் உதாரணமாக இருந்துவருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்தியாவில் பிறந்த அனைவரும் என்னுடைய சகோதர சகோதரிகள் என்று பள்ளிப்படிக்கும் காலத்தில் இருந்தே உறுதிமொழியை கேட்டிருப்போம். அது இந்துவா இருந்தாலும், கிறிஸ்துவராக இருந்தாலும், முஸ்லீமாக இருந்தாலும் சரி.. அனைவரையும் தன் உடன்பிறந்தவராக நினைக்கும் எண்ணம் நிச்சயம் இந்தியாவைவிட்டு எப்போதும் மறையாது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆம் உத்தரப்பிரதேச மாநிலத்தைச்சேர்ந்த பூஜா என்பவரின் தந்தை கொரோனா தொற்றின் முதல் அலையின் போது உயிரிழந்தார். இதனால் இவரது குடும்பம் மிகுந்த வறுமையில் இருந்துவந்த நிலையில் தான், கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி இந்து மதப்படி திருமணம் நடந்து முடிந்தது. ஆனால் பணப்பற்றாக்குறையின் காரணமாக திருமணத்திற்கு திருமண மண்டபம் எதுவும் முன்பதிவு செய்ய இயலவில்லை. இந்த தகவலையறிந்த பூஜாவின் பக்கத்து வீட்டுக்காரரான பர்வேஸ், கவலைப்படாதீர்கள், இவரின் திருமணத்தை நாங்கள் எங்கள் வீட்டிலேயே நடத்திக்கொள்கிறோம் என அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
ரம்ஜான் நோன்பு காலமாக இருந்தப்போதும் எவ்வித தயக்கம் இன்றி இந்து மதப்பெண்ணின் திருமணத்தை தனது மகளின் திருமணத்தைப்போன்று பல ஏற்பாடுகளை செய்துள்ளார். இதற்காக தனது முற்றத்தில் திருமணத்திற்கான மேடை அலங்காரம், சாப்பாடு பரிமாறுவதற்கு என அனைத்து இடங்களையும் தயார் செய்துள்ளார். இதோடு மட்டுமின்றி திருமண நாளான்று வரும் விருந்தினர்களையெல்லாம் புன்முகத்தோடு வரவேற்றனர். இஸ்லாமிய பெண்கள் மற்ற பெண்களுடன் சேர்ந்து திருமணப்பாடல்களை பாடி அசத்தினர்.
மேலும் திருமணத்திற்குப் பிறகு விருந்தினர்களுக்கு பாரம்பரிய உணவு மற்றும் பரிசுகளை குடும்பத்தினர் வழங்கினர். "திருமண ஊர்வலம் திரும்புவதற்கு முன்பு பர்வேஸ் மணமகனுக்கு ஒரு தங்கச் சங்கிலியை பரிசாக அளித்தார். அவர்கள் விருந்தினர்களை பூஜா அவர்களின் சொந்த மகள் போல் நினைத்து திருமணத்தை நடத்தி முடித்துள்ளார். இச்சம்பவம் பார்ப்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ரம்ஜான் நோன்பு காலத்தில் தனது வீட்டை இந்து மணப்பெண் திருமணம் நடத்த அனுமதித்தது குறித்து தகவல் தெரிவிக்கையில், "பூஜா என் மகள் போன்றவள். அதனால், அவளது திருமணம் பற்றி அறிந்ததும், குடும்ப உறுப்பினர்களாக எங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சித்தோம். இது புனிதமான ரம்ஜான் மாதம், மகளின் திருமணத்தை ஏற்பாடு செய்வதை விட வேறு என்ன இருக்க முடியும் என மகிழ்வோடு தெரிவித்தனர். என்னதான் இந்து மற்றும் முஸ்லீம்கள் சண்டையிட்டுக்கொள்கின்றனர் என ஒருபுறம் கூறப்பட்டாலும் அதெல்லாம் முற்றிலும் தவறு என்பதை அவ்வப்போது இதுப்போன்று நடைபெறும் சம்பவங்கள் அனைவருக்கும் புரியவைக்கிறது.