சென்னையை சேர்ந்த இஸ்லாமிய தம்பதி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 1 கோடியே 2 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளனர். 


1.02 கோடி நன்கொடை


உலகின் பணக்கார கோவிலான திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்திடம் (TTD) செவ்வாய்க்கிழமை அப்துல் கனி மற்றும் நுபினா பானு ஆகியோர் நன்கொடையாக காசோலையை வழங்கினர். சென்னையைச் சேர்ந்த தம்பதியினர் கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகுலா மண்டபத்தில் TTD செயல் அலுவலர் தர்மா ரெட்டியை சந்தித்து காசோலையை வழங்கியுள்ளனர். மொத்தத் தொகையில், 15 லட்சம் ரூபாய் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, இது தினமும் கோவிலுக்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு இலவச உணவு வழங்குகிறது. மீதமுள்ள 87 லட்ச ரூபாயில் ஸ்ரீ பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சமையலறையில் புதிய மரச்சாமான்கள் மற்றும் பொருட்கள் வாங்குகின்றனர்.



பிரம்மோற்சவ விழா


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 27 ஆம் தேதி பிரம்மோற்சவ விழாவுக்கான கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த விழா அக்டோபர் 5 ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருமலையில் நேற்று கோயில் முழுவதும் வாசனை திரவியங்களால் சுத்தப்படுத்தும் நிகழ்ச்சியான ‘கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்’ நிகழ்வு நடைபெற்றது. அதனால் பக்தர்கள் நண்பகல் 12 மணிக்கு பின்னர்தான் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.


தொடர்புடைய செய்திகள்: பத்து ரூபாய் நாணயத்தை செல்லாது என சொன்னால் தண்டணையா? - RBI சொல்வது என்ன?


5.71 கோடி காணிக்கை


இந்த நிகழ்வையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் கடந்த திங்கட்கிழமை மட்டும் பக்தர்கள் 5.71 கோடி ரூபாய் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் அன்றைய தினம் 62,276 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில், 31,140 பேர் தலைமுடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






மத நல்லிணக்கம்


பாலாஜி கோயில் என்று அழைக்கப்படும் இந்தக் கோயிலுக்கு அப்துல் கனி என்ற தொழிலதிபர் நன்கொடை அளிப்பது இது முதல் முறையல்ல. 2020 ஆம் ஆண்டில், கோவிட் -19 தொற்றுநோய்களின் போது கோயில் வளாகங்களில் கிருமிநாசினிகளை தெளிக்க பல பரிமாண டிராக்டர் பொருத்தப்பட்ட தெளிப்பானை நன்கொடையாக வழங்கினார். முன்னதாக கோயிலுக்கு காய்கறிகள் கொண்டு செல்வதற்காக ரூ.35 லட்சம் மதிப்பிலான குளிர்சாதனப் பெட்டியை வழங்கினார்என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் பலரும் இந்த தம்பதிகளை பாராட்டி வருகின்றனர். பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் இந்த செயலை செய்துள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது. மத நல்லிணக்கத்தை பலருக்கும் போதிக்கும் வகையில் இவர் செய்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். நாட்டில் பல்வேறு மதப் பிரிவினைவாதங்கள் நடைபெற்றுவரும் நிலையில் இதுபோன்ற செயல்கள் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.