போலீஸுக்கும் பொதுமக்களுக்குமான பஞ்சாயத்தில் எப்போதுமே சுவாரசியத்துக்குக் குறைவிருக்காது. அந்தவகையில் அண்மையில் மும்பையின் மலாட் பகுதியில் பார்க்கிங் தவறாக செய்துவிட்டு போலீசைத் தாக்கிப் பஞ்சாயத்து செய்ததற்காக அம்மா-மகள் இருவர் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.






மும்பையின் மலாட் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஷிவானி மற்றும் அவரது அம்மா லட்சுமி, இருவரும் நேற்று மலாட்டின் சூப்பர் மார்க்கெட் ஒன்றின் வாசலில் காரை பார்க்கிங் செய்துவிட்டு மார்க்கெட் உள்ளே செல்ல முற்பட்டுள்ளனர். ஆனால் காரின் கண்ணாடிக் கதவுகள் டிண்ட் செய்யப்பட்டிருந்து கூடவே ஏற்கெனவே பார்க்கிங் செய்யபப்ட்டிருந்த ஒரு வண்டியின் பின்னால் டபிள் பார்க்கிங் செய்திருந்தனர். இதனைப் பார்த்த ட்ராபிக் போலீஸ் டிண்ட்டை அகற்றும்படியும் காரை சரிவர பார்க்கிங் செய்யும்படியும் அறிவுறுத்தினர். இதனால் கோபம் அடைந்த அம்மா மகள் இருவரும் அந்த ட்ராபிக் போலீஸிடம் வாக்குவாதம் செய்யத் தொடங்கியுள்ளனர். 


நிலைமையைத் தீர்த்து வைக்க அங்கே நிர்பயா ஸ்குவாட்டின் போலீஸார் வந்துள்ளனர். ஆனால் அவர்களிடமும் ஷிவானி தொடர்ந்து பிரச்னை செய்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் அந்தக் காவலரைக் கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனால் கோபமடைந்த காவல்துறை அவர் மீது தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தது. ஆனால் இதுவரை கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 


நடிகர் ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டதை அடுத்து அண்மைக்காலமாகவே மும்பை வாழ் பொதுமக்கள் பலர் காவல்துறைக்கு எதிராகத் தொடர்ந்து எதிர்ப்புக்குரல் பதிவு செய்வது குறிப்பிடத்தக்கது. சொகுசுக்கப்பல் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யன்கானுக்கு பல வாரங்களுக்குப் பிறகு தற்போது ஜாமீன் கிடைத்துள்ளது. இதற்கிடையே ஆர்யன் கைது செய்யப்பட்டதற்கு எதிராகக் குரல்கொடுத்த பலர் அரசாங்கத்தையும் காவல்துறையையும் எதிர்த்து தொடர்ந்து டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குரல்கொடுத்து வந்தனர். அதே சமயம் ஆர்யனுக்கு ஜாமீன் கிடைத்ததையும் கொண்டாடி வருகின்றனர்.





இதற்கிடையேதான் தற்போது காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இந்த பிரச்னை உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.