அமராவதி எம்.பி நவ்நீத் ராணா காவலில் வைத்து தவறாக நடத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே, எம்.பி நவநீத் ராணா மற்றும் அவரது எம்.எல்.ஏ கணவர் ரவி ராணா, கர் காவல் நிலையத்தில் கூலாக அமர்ந்து தேநீர் அருந்துவதைக் காட்டும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அவர் அந்த வீடியோவை வெளியிட்டு, "நாங்கள் இன்னும் ஏதாவது சொல்ல வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.


வீடியோவைப் பற்றி பேசிய நவ்நீத் ராணாவின் வழக்கறிஞர் ரிஸ்வான் மெர்ச்சன்ட், "அவர் இரவு முழுவதும் கர் காவல் நிலையத்தில் இருந்தார், அன்று இரவு 1 மணியளவில் சாண்டாகுரூஸ் காவல் நிலைய லாக்-அப்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனக்கு தெரிந்த வரையில், சான்டாக்ரூஸ் காவல் நிலைய லாக்-அப்பில் அவர் காவலில் வைக்கப்பட்டது தொடர்பான பிரச்சனைகளை பார்க்கும்போது, பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து போலீஸ் லாக்-அப்களிலும் சிசிடிவி கவரேஜ் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இதற்கு பதில் அளிப்பதற்கு முன்பு போலீஸ் கமிஷனர் ஏன் சாண்டாக்ரூஸ் காவல்நிலைய சிசிடிவி பதிவுகளை பார்க்கவில்லை?" என்று கேட்டார். 



எம்.பி நவ்நீத் ராணா மற்றும் அவரது கணவர் எம்.எல்.ஏ ரவி ராணா ஆகியோர் இந்திய தண்டனைச் சட்டத்தின் 353 வது பிரிவின் கீழ் எஃப்.ஐ.ஆர் அடிப்படையில் காவலில் வைக்கப்பட்டனர், இது ஒரு பொது ஊழியரை அவரது கடமையை நிறைவேற்றும் போது தாக்குதல் மற்றும் குற்றவியல் சக்தியைப் பயன்படுத்துதல் ஆகிய குற்றங்களை குறிக்கிறது.


திங்களன்று, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு நவ்நீத் ராணா கடிதம் எழுதினார், உத்தவ் தாக்கரேவின் இல்லத்திற்கு வெளியே ஹனுமான் சாலிசாவை ஓதுமாறு மிரட்டியதற்காக கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து லாக்கப்பில் சித்திரவதை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டி இருந்தார். சாதி காரணமாக தான் தவறாக நடத்தப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். அந்தக் கடிதத்தில், ராணா, "நான் இரவு முழுவதும் பலமுறை குடிநீர் கேட்டேன். ஆனால், எனக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. எனக்கு அதில் பெரிய அதிர்ச்சியும் இல்லை, நான் பட்டியல் சாதியைச் சேர்ந்தவன் என்பதால் இது நடக்கும் என்று எனக்கு தெரியும்.


அங்கிருந்த காவல்துறை ஊழியர்கள் நீ தாழ்த்தப்பட்ட சாதி என்பதால் உனக்கு அதே கிளாசில் தண்ணீர் கொடுக்க முடியாது என்று என்னிடம் கூறினார்கள். கர் காவல் நிலையத்தின் லாக்-அப்பில் என்னை நாயை அடிப்பது போல அடித்தார்கள்" என்று அவர் புகார் அளித்து இருந்தார்.






மும்பை போலீஸ் கமிஷனர், சம்பந்தப்பட்ட துணை போலீஸ் கமிஷனர் (டிசிபி), சம்பந்தப்பட்ட உதவி போலீஸ் கமிஷனர் (ஏசிபி) மற்றும் போலீஸ் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராணா கோரினார். ராணா மீது IPC பிரிவு 153 (A) (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு பாதகமான செயல்களைச் செய்தல்) மற்றும் பிரிவு 135 (காவல்துறையின் தடை உத்தரவுகளை மீறுதல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மக்களவைச் செயலகத்தின் சிறப்புரிமை மற்றும் நெறிமுறைகள் பிரிவு மகாராஷ்டிர அரசிடம் உண்மை அறிக்கையை கோரியது குறிப்பிடத்தக்கது.