ஒரே நேரத்தில் 78,220 இந்திய மூவர்ண கொடியை அசைத்து இந்தியாவில் ஒரு கின்னஸ் சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி பீகாரின் போஜ்பூர் நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் இந்தச் சாதனைப் படைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு கடந்த ஆண்டு முதல் இதற்கான சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றனர். ‘அஷாதி கா அமிரிட் மஹோத்சவ்’(Azaadi ka Amrit Mahotsav) என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கடந்த 23ஆம் தேதி பீகாரின் போஜ்பூர் பகுதியில் மத்திய உள்துறை மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சகம் சார்பில் விழா ஒன்று நடத்தப்பட்டது.
அதில் சுதந்திர போராட்ட வீரர் குன்வர் சிங்கை போற்றும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். இதில் விஜயோட்சவ் என்ற பெயரில் 78,220 பேர் இந்திய தேசிய கொடியை ஏந்தி அசைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி 78,220 பேர் சுமார் 5 நிமிடங்கள் வரை இந்திய தேசிய கொடியை அசைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
இதற்கு முன்பாக ஒரே இடத்தில் அதிக நபர்கள் தங்களுடைய தேசிய கொடியை அசைத்த சாதனையை பாகிஸ்தான் வைத்திருந்தது. 2004ஆம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 56,000 பேர் ஒரே இடத்தில் பாகிஸ்தான் தேசிய கொடியை அசைத்திருந்தனர். அந்தச் சாதனையை தற்போது இந்தியா முறியடித்துள்ளது.
இந்திய சுதந்திர போராட்டத்தில் சிப்பாய் கழகம் 1857ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் பீகார் மாநிலத்தில் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தவர் குன்வர் சிங். அவர் 1858ஆம் ஆண்டு இந்தப் போராட்டத்தில் உயிரிழந்தார். அவர் ஜெகதீஷ்பூர் கோட்டையில் இருந்த பிரிட்டிஷ் கொடியை தகர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்