கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்தியாவின் நுழைவு வாயிலான மும்பையின் பெரும்பான்மையான முக்கிய இடங்கள் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக அம்மாநில அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வளமான இயற்கை வளங்களை நாகரிகம் என்ற பெயரில் தொடர்ந்து அழித்து வரும் நிலையில் பல்வேறு இயற்கைச் சீற்றங்களால் மக்கள் இன்னல்களைச் சந்தித்துவருகின்றனர். குறிப்பாக தெற்கு ஆசியாவின் முதல் நகரமான மும்பையில் காலநிலை மாற்றங்கள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் தான் மும்பை காலநிலை செயல் திட்டம் மற்றும் அதன் இணையதளத்தை மகாராஷ்டிரா சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய மும்பை நகராட்சி கமிஷனர் இக்பால் சிங் சாஹல், நகரில் எப்போதும் இல்லாத அளவிற்கு காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், மழை, வெள்ளம், சூறாவளி போன்ற பல்வேறு கோணங்களில் இயற்கை நமக்கு எச்சரிக்கை விடுக்கிறது. ஆனால் இதனையெல்லாம் நாம் பெரிதில் எடுத்துக்கொண்டு விழித்துக் கொள்ளாவிடில் அடுத்த 25 ஆண்டுகளில் ஆபத்தான சூழலை நாம் சந்திக்க நேரிடும். இவை அடுத்த தலைமுறை மட்டுமில்லாது, தற்போதயை தலைமுறையும் பாதிக்ககூடும் என்று தெரிவித்துள்ளார்.
இதோடு வருகின்ற 2050 ஆம் ஆண்டுக்குள் மும்பை நகரின் முக்கிய வணிக தளங்களான நரிமன் பாயிண்ட் மற்றும் மந்திரலாயா உள்ள மாவட்டங்கள் கடல் மட்டத்தின் உயர்வின் காரணமாக தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளது என மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளார். மேலும் மும்பை மாநகரின் செயல் திட்டத்தை தயாரித்துள்ளதாகவும், இந்த தரவு மதிப்பீடு அதிகரித்து வரும் நிலையில் காலநிலை நிச்சயமற்ற தன்மையால் மிகவும் பாதிக்கக்கூடியப் பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது எனவும் பிரஹன் மும்பை மாநகராட்சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் மாநகராட்சி தெரிவித்துள்ள அறிக்கையின் படி, கடந்த 10 ஆண்டுகளில் மும்பையில் ஒர் ஆண்டிற்கு பெய்யும் சராசரி மழை அளவினை விட ஆறு கனமழை, ஐந்து மிக கனமழை மற்றும் 4 மிக அதீத கனமழை பெய்திருப்பதாகக் கண்டறிப்பட்டுள்ளது. இதோடு மட்டுமின்றி ஆண்டிற்கு பெய்யும் அனைத்து மழைப்பொழிவுகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் போது சுமார் 10 சதவீதம் கனமழையின் பட்டியியலின் கீழ் வருகிறது. குறிப்பாக கடந்த 129 ஆண்டுகளில் முதல் முறையாக மும்பையில் கடந்த 15 மாதங்களில் 3 முறை சூறாவளி ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் இதன் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் நரிமன் பகுதியில் சுமார் 5 முதல் 5. 5 அடி நீர் தேங்கியிருந்ததையும் நாம் நேரடியாக கண்டோம். முன்பெல்லாம் பனிப்பாறைகள் உருகி அதன் காரணமாக பல்வேறு காலநிலை மாற்றங்கள் ஏற்படும். ஆனால் இதனால் பிரச்சனைகள் இருக்காது. ஆனால் தற்போது ஏற்படும் காலநிலை மாற்றங்கள் மக்களை நேரடியாக பாதிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இயற்கை மாற்றங்கள் காரணமாக கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் வருகின்ற 2050-ஆம் ஆண்டில் சென்னை, மும்பை உள்ளிட்ட ஏழு நகரங்கள் தண்ணீரினுள் மூழ்கும் அபாயம் இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இதனால் சுமார் 3 கோடியே 60 லட்சம் இந்தியர்கள் ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த இயற்கை சீற்றங்களை ஓரளவிற்கு தடுக்க, கார்பன் உமிழ்வைக் குறைக்க நடவடிக்கை எடுத்தால் கடல்மட்ட உயர்வைத் தடுத்து இந்த பேராபத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.