எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று  மத்திய சுகாதார செயலாளர் மாநிலங்களுக்கு எச்சரித்துள்ளார்.  மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், மத்திய சுகாதார செயலாளர் அஜய் குமார் பல்லா  தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச செயலாளர்களுடன் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.


தேசிய அளவில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், சில மாநிலங்களில் உள்ளூர் மட்ட பரவல் அதிகரித்து காணப்படுவதாகவும் மத்திய சுகாதார செயலாளர் தெரிவித்தார்.   


கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அன்றாட புதிய பாதிப்புகளும் அதிகரித்து வரும் மாவட்டங்களில் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். பொது சுகாதார நடவடிக்கைகள், கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.


அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறு வலியுறுத்தினார். ஓணம் பண்டிகைக்குப் பிறகு கேரள மாநிலத்தில் பாதிப்புகள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டார். 


கேரளா ஓணம் பண்டிகை: 


கேரளாவில் ஓணம் பண்டிகைக்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கின.  கிட்டத்தட்ட 2 மாதங்களுக்குப் பிறகு, கடந்த புதன்கிழமை தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30,000-ஐக் கடந்தது. மேலும், அதன் வருடாந்திர தொற்று உறுதி விகிதம்(Weekly Positivity Rate) 17.7 ஆக உள்ளது. தேசிய அளவில் இந்த எண்ணிக்கை 2.19% ஆக உள்ளது. 


விரைவு பரிசோதனை: கேரளாவில், மற்ற மாநிலங்களை விட அதிகளவில் விரைவு பரிசோதனை மூலம் கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்படுகிறது. மொத்த பரிசோதனைகளில்   70% RT-PCR பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முன்னதாக தெரிவித்தது. ஆனால், கேரளாவில் RT-PCR பரிசோதனையின் எண்ணிக்கை 50%க்கும் குறைவாக நடத்தப்படுகிறது. 


விரைவு பரிசோதனையின் மூலம் (ரேபிட் ஆண்டிஜென்) நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்து, சரியான நேரத்தில் அவர்களுக்கு சிகிச்சையை ஆர்மபிக்கிறது. 




நோய் எதிர்ப்புக் கிருமிகளை அடிப்படையாகக் கொண்டு ஐ.சி.எம்.ஆர். நடத்திய செரோ-கண்காணிப்பு ஆய்வில், நாட்டிலேயே மற்ற மாநிலங்களை விட கேரளாவில் உண்மையான பாதிப்புகள் கண்டறியப்படுவதாக தெரிய வந்தது. 


ஆய்வின் முடிவில், " அதிகாரப்பூர்வ கோவிட்-19 பரவல் எண்ணிக்கையை விட 33 மடங்கு வரை அதிக பாதிப்புகள் இந்தியாவில் ஏற்பட்டிருக்கலாம். பீகார் மாநிலத்தில் 134 மடங்காகவும், உத்தர பிரதேச மாநிலத்தில் 100 மடங்காகவும், தமிழகத்தில் 25 மடங்காகவும், கேரளாவில் 6 மடங்காகவும் உண்மையான பாதிப்புகள் இருக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதாவது, தமிழ்நாட்டில் சராசரியாக 25 கொரோனா நோயாளிகளில் ஒருவர் மட்டுமே அதிகாரப்பூர்வமாக கண்டறியப்பட்டுள்ளனர். எனவே, தமிழ்நாட்டில் ஏற்கனவே 5 கோடிக்கும் (மொத்த மக்கள்தொகையில் 65%) அதிகமானோர் (அதிகாரப்பூர்வ எண்ணிக்கை * 25 மடங்கு) கொரோனா  தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்புக் கிருமிகளை கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் மேலும் 3 கோடி மக்களுக்கு கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. 




கோவிட்-19 தொற்றுக்கு எதிராக ஆதாரங்களின் அடிப்படையிலான பொது மருத்துவ நடவடிக்கையை வெளிப்படையாக கேரளா மாநிலம் மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக, அங்கு கொரோனா இறப்பு விகிதமும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோர் விகிதமும் தேசிய சராசரியை விட குறைந்து காணப்படுகிறது.