கடந்தாண்டு குடியிருப்பு ஒன்றில் இருந்து தங்கம் மற்றும் 40,000 ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்த நபர்களை, தபால்காரர்கள் மற்றும் பழ விற்பனையாளர்கள் போல் வேடமிட்டு சென்று மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இரண்டு இணை குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முக்கிய குற்றவாளியான சல்மான் சுல்பிகர் அன்சாரி, அலிபாபா என்ற பெயரில் ட்ரூகாலர் செயலியில் இருந்தது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.
அவர் தனது அடையாளத்தை மறைக்க இந்த பெயரைப் பயன்படுத்தியதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஸ்மிதா பாட்டீல் கூறுகையில், "கடந்த 2021ஆம் ஆண்டு, டிசம்பர் 31 ஆம் தேதி, தஹிசார் கிழக்கில் உள்ள குடியிருப்பு வளாகம் கொள்ளையடிக்கப்பட்டது. விசாரணையின் போது, 176 சிசிடிவி கேமராக்களில் இருந்த காட்சிகளையும் 97 சிம் கார்டுகளின் இருப்பிடங்களையும் போலீசார் கண்காணித்தனர்.
இந்த வழக்கில் விசாரணை நடத்தப்பட்ட பிறகும், எந்த ஆதாரமும் கிடைக்காததால், சிசிடிவிகளை சோதனை செய்யவும், குற்றம் நடந்த இடத்திற்கு அருகிலுள்ள சிம் கார்டுகளைக் கண்காணிக்கவும் தொடங்கினர்.
கொள்ளையடிக்கப்பட்ட நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சிம் கார்டுகள் இருந்த இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, நொய்டாவில் அவற்றைக் கண்காணித்தோம்.
குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண, பழ விற்பனையாளர்கள் மற்றும் தபால்காரர்கள் போல் போலீசார் மாறுவேடமிட்டு சென்றனர். மேலும், இரண்டு குற்றவாளிகளான ஹைதர் அலி சைஃபி மற்றும் திருடப்பட்ட தங்கத்தை வாங்கிய நகை வியாபாரி குஷால் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அனைவரும் உத்தரபிரதேசத்தில் வசிப்பவர்கள். திருடப்பட்ட தங்கம் மற்றும் 18 லட்ச ரூபாயும் மீட்கப்பட்டது" என்றார்.
திரைப்படத்தில் வருவது போல பழ விற்பனையாளர்கள் மற்றும் தபால்காரர்கள் போன்று வேடமிட்டு சென்று குற்றவாளிகளை காவல்துறை பிடித்திருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
அதேபோல, குற்றவாளிகளை பிடிக்க 176 சிசிடிவி காட்சிகளயும் 97 சிம்கார்டுகளையும் காவல்துறை ஆய்வு செய்திருப்பது கேட்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில், ஒடிசாவில் பாலிவுட் திரைப்படமான 'தூம்' பாணியில் ஒரு கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த திரைப்படத்தால் ஈர்க்கப்பட்ட திருடர்கள், நபரங்பூர் மாவட்டத்தின் உயர்நிலைப் பள்ளியில் கணினிகள் மற்றும் பிற மின்னணுப் பொருட்களைத் திருடிச் சென்றனர்.
நபரங்பூர் காதிகுடா பகுதியில் உள்ள இந்திராவதி திட்ட மேல்நிலைப் பள்ளியை திறந்தபோது, பள்ளி தலைமையாசிரியர் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு கணினிகள், பிரிண்டர், பிரிண்டர் இயந்திரம், எடை இயந்திரம் மற்றும் ஒலிப்பெட்டி திருடுபோனது தெரிய வந்தது.
பள்ளியின் பிளாக் போர்டில் 'தூம் 4', 'நாங்கள் திரும்புவோம் விரைவில் வருவோம்' என்று எழுதப்பட்டிருந்தது பள்ளி அதிகாரிகளை உலுக்கியது. "முடிந்தால் எங்களைப் பிடிக்கவும்" என திருடர்கள் பிளாக் போர்டில் ஒடியா மொழியில் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.