அனுமதியின்றி ஒலிபெருக்கியில் ‘ஹனுமான் சாலிசா’ ஒலிக்கச் செய்ததாக மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் மகேந்திர பனுசாலியை மும்பை போலீசார் கைது செய்தனர்.
மும்பையின் காட்கோபர் பகுதியில் உள்ள மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா அலுவலகத்திற்கு வெளியே அதன் தலைவர் மகேந்திர பனுசாலி ‘ஹனுமான் சாலிசா’ வாசிப்பதற்காக ஒலிபெருக்கிகளை அமைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழுகைக்கான ஒலிபெருக்கிகளை அகற்றாவிட்டால், மசூதிகளுக்கு வெளியே உள்ள ஒலிபெருக்கிகளில் ஹனுமான் சாலிசாவை ஒலிக்கச் செய்யப்போவதாக எம்என்எஸ் தலைவர் ராஜ் தாக்கரே மிரட்டியதைத் தொடர்ந்து கட்சி அலுவலக வாசலில் போட்டிக்கு ஒலிப்பெருக்கியை நிறுவியதாகத் தெரிகிறது.
இருப்பினும், உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர அரசு, ஒலிபெருக்கியில் ஒலித்த ‘ஹனுமான் சாலிசா’ முழக்கங்களைக் கேட்டு கோபமடைந்து மகேந்திர பனுசாலியைக் கைது செய்துள்ளதாக கட்சித் தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
மகேந்திர பனுசாலி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மும்பை போலீசார் அவரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது.
“நான் மட்டுமல்ல. ஒலிப்பெருக்கியில் ஒலிக்கச் செய்த யாருமே அனுமதி வாங்கவில்லை. எனவே என் மீது நடவடிக்கை எடுத்தால் அனைவரது மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் தங்கள் பணியை செய்தனர். காவல்துறையிடம் எதுவும் சொல்லாதே என எங்கள் தலைவர் கூறியுள்ளார். ஒலிபெருக்கிகள் எங்கு பயன்படுத்தப்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று எம்என்எஸ் தலைவர் மகேந்திர பனுசாலி மேலும் கூறினார்.
மசூதிகளுக்கு ராஜ் தாக்கரே மிரட்டல்:
மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் 2 ஏப்ரல் 2022 அன்று தனது கட்சியின் வருடாந்திர ’குடி பட்வா’ கூட்டத்தில் உரையாற்றினார்.
மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகள் குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்றால், மசூதிகளின் முன் இரட்டை ஒலிபெருக்கிகளை வைத்து ஹனுமான் சாலிசா கோஷமிடுவேன் என்று தனது கடுமையான பாணியில் ராஜ் தாக்கரே அப்போது மிரட்டல் விடுத்தார்.
மேலும், மும்பையின் குடிசைப் பகுதிகளில் உள்ள மசூதிகள், மதரஸாக்களில் போலீஸார் முறையாகச் சோதனையிட்டால் பல விஷயங்கள் தெரியவரும் என்றும் அவர் கூறினார். மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் பிற இடங்களின் மாறிவரும் மக்கள்தொகையை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
ராஜ் தாக்கரே, “ஒருவரின் பிரார்த்தனை உரிமையை நான் எதிர்க்கவில்லை, ஆனால் மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும். அவற்றை அகற்றுமாறு அரசை கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால், அந்த மசூதிகளுக்கு முன்பாக ஹனுமான் சாலிசாவைக் கோஷமிட இரட்டை ஒலிபெருக்கிகளை வைப்போம் என்று நான் இப்போதே சொல்கிறேன்.எந்த மதம் ஒலிபெருக்கியைக் குறிப்பிடுகிறது? உங்கள் மதம் கண்டுபிடிக்கப்பட்டபோது ஏதேனும் ஒலிபெருக்கி இருந்ததா?” என அவர் அந்தக் கூட்டத்தில் பேசியதாகத் தெரிகிறது.