மேற்குவங்கத்தில் பைகுந்தாபூர் வனச் சரகத்தில் அடுத்தடுத்து கங்காரூக்கள் கண்டறியப்படுவது புரியாத புதிராக அதிகாரிகளுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த மார்ச் மாதம் மேற்குவங்க மாநிலம் அலிபுராதுர் பகுதிக்குள் கங்காரு என்ற பாலூட்டி விலங்கினத்தை கடத்த முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஜல்பாய்குரி மாவடம் கஜோலாதோபா வனச்சரகத்துக்கு உட்பட்ட  பகுதியில் இரண்டு கங்காரூக்கள் காயங்களுடன் மீட்கப்பட்ட சில மணி நேரத்திலேயே ஃபராபாரி பகுதியில் இரண்டு கண்டறியப்பட்டன.


இவற்றில் ஒன்று மிகவும் மோசமான காயங்களுடனும், ஒன்று உயிரிழந்தும் கண்டறியப்பட்டுள்ளது.


இது குறித்து பைகுந்தாபூர் வனச்சரக அதிகாரி ஹரி கிருஷ்ணன் கூறியதாவது:


இந்த வனப்பகுதியில் கங்காருக்களைப் பார்ப்பது இதுவே முதன்முறை. இது இயல்புக்கு மாறானதும் கூட. இங்கு எப்படி கங்காரூக்கள் வந்தன என்பது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
எனக்கு சிலர் கங்காரூக்கள் காயங்களுடன் கிடப்பதாக தகவல் சொன்னார்கள். அதனையடுத்து நாங்கள் அந்த இடத்துக்கு வந்தோம். வடக்கு பெங்காலில் இது வரை வனப்பகுதி, உயிரியல் பூங்கா, சஃபாரி பார்க் என எங்கும் கங்காருவைப் பார்த்ததில்லை. காயங்களுடன் மீட்கப்பட்ட கங்காரூவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இவ்வாறு அவர் கூறினார்.


கங்காரு பாலூட்டிகளிலேயே ஒரு உட்பிரிவான மார்சூபியல் இனத்தைச் சேர்ந்தது. மார்சூபியல் விலங்குகள் குட்டி போடும். குட்டியைப் பாதுகாக்க வயிற்றில் ஒரு பை வைத்திருக்கும்.


கஜோதோபா, தாப்ராம் வனப்பகுதிகள் பைகுந்தாபூர் வனச்சரகத்துக்கு உட்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிருந்து மீட்கப்பட்ட அவை பெங்கால் சஃபாரி பூங்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.


பைகுந்தாபூர் மேற்குவங்கத்தின் ஜல்பாய்புகிரி மாவட்டத்தைச் சேர்ந்தது. இது இமாலய மலையின் தெற்கு அடிவாரத்தில் உள்ளது. இங்கு காட்டு யானைகள் அதிகம். டீஸ்டா நதி இருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் பல வகைப் பறவைகள் இடம்பெயர்ந்து வந்து செல்லும். வங்கதேசம் தெற்கேவும், நேபாளம் கிழக்கேவும், பூடான் வடக்கேவும் உள்ள பகுதி. 


முன் கூட்டியே வந்த தகவல்..


கங்காரூக்களை மேற்குவங்க வனப்பகுதிக்குள் யார் எப்போது கொண்டு வந்தனர் என்ற தகவல் இல்லையென்றாலும் கூட அவை அங்கு கடத்தி வரப்படுவதாக ஏற்கெனவே சில ரகசியத் தகவல்கள் இருந்தன என ஹரிகிருஷ்ணன் கூறுகிறார்.
இந்த வழக்கில் இதுவரை சய்யது ஷேக், இம்ரான் ஷேக் என இருவர் கைதாகியுள்ளனர். இருவரும் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வனவிலங்குகள் கடத்தல்காரர்கள் என இவர்களை கைது செய்த குமார்கிரா காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.  


கங்காரூக்கள் ஆஸ்திரேலியாவில் வாழும் மார்சூபியல் வகையைச் சேர்ந்த விலங்கினம் என்பது குறிப்பிடத்தக்கது.