பேஸ்புக்கில் வெளியான சர்ச்சை பதிவு காரணமாக ஒடிசா மாநிலத்தில் இரு மதப்பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்துள்ள நிலையில், பத்ரக் மாவட்டத்தில் வரும் 30ஆம் தேதி வரை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் தொடர் பதற்றம்:
ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தில் அடிக்கடி மதக்கலவரம் ஏற்படும் என்பதால் பதற்றமான பகுதியாக பார்க்கப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், பேஸ்புக்கில் வெளியான பதிவு ஒன்று பெரும் வன்முறைகளுக்கு வழிவகுத்தது.
இதன் விளைவாக, சமூக விரோதிகள் பல கடைகளுக்கு தீ வைத்தனர். 450 கடைகள் தீக்கரையானது. 9 கோடி ருபாய் மதிப்புள்ள பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஒடிசா மாநில வரலாற்றில் இவ்வளவு நீண்ட காலம் ஊரடங்கு விதிக்கப்பட்டதே இல்லை.
இந்த நிலையில், பேஸ்புக்கில் வெளியான பதிவு ஒன்று, குறிப்பிட்ட மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் இருப்பதாக புகார் எழுந்தது. புருணா பஜார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போராட்டம் வெடித்தது. போராட்டம் கலவரமாக மாறியது.
பேஸ்புக் பதிவால் வெடித்த கலவரம்:
இதையடுத்து, நிலைமையை கட்டுப்படுத்த காவல்துறை அதிகாரிகள் தடியடி நடத்தினர். நேற்று இரவு, பத்ரக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கல் வீச்சு சம்பவத்தின் போது சில அதிகாரிகள் காயமடைந்ததை அடுத்து கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டனர்.
இச்சூழலில், பத்ரக் மாவட்டத்தில் வரும் 30ஆம் தேதி வரை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில கூடுதல் தலைமை செயலாளர் சத்யபிரதா சாஹு வெளியிட்ட அறிக்கையில், "பத்ரக் மாவட்டத்தில், செப்டம்பர் 30ஆம் தேதி, அதிகாலை 2 மணி வரை, இணையம் மற்றும் WhatsApp, Facebook, X மற்றும் பிற சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதற்கும் அணுகுவதற்கும் உள்ள தடையை உள்துறை அமைச்சகம் 48 மணிநேரத்திற்கு நீட்டித்துள்ளது.
அதேசமயம், சமீபகாலமாக பத்ரக் மற்றும் தாம்நகர் பகுதிகளில் சமூக ஊடகப் பதிவுகள் காரணமாக பல்வேறு வன்முறை வகுப்புவாத சம்பவங்கள் நடப்பது மாநில அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. அதேசமயம் வகுப்புவாத வன்முறையை பரப்புவதற்காக இணையத்தை தவறாகப் பயன்படுத்துவதாக மாவட்ட நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது.
எனவே, பத்ரக் மாவட்டம் முழுவதும் பொது அமைதியை சீர்குலைத்து, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மீட்டெடுக்கும் வகையில், மேற்கூறிய ஊடகங்களில் பதற்றத்தை தூண்டும் வகையில் செய்திகள் பரவாமல் தடுக்கும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.