நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்கில் மும்பை மெட்ரோவுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
மும்பை, கொலாபாவில் இருந்து பாந்த்ரா-குர்லா காம்ப்ளஸ் வரை பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில் செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்காக மும்பையின் நுரையீரலாகக் கருதப்படும் கோரேகாவ் ஆரே காலனி வனப்பகுதியில் கார் ஷெட் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். இப்பிரச்னை உச்ச நீதிமன்றம் வரை சென்றது. ஆனால், நீதிமன்றம் மெட்ரோ ரயில் திட்டத்துக்குத் தேவையான மரங்களை வெட்ட அனுமதித்தது. 2019-ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவுடன் 2,000-க்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட்டன. இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. புதிய முதல்வராகப் பதவியேற்ற உத்தவ் தாக்கரே ஆரே காலனியில் மெட்ரோ ரயிலுக்கு கார்ஷெட் அமைக்கும் திட்டத்துக்கு தடை விதித்ததோடு கட்டுமான பணிகளையும் நிறுத்தினார்.
ஏக்நாத் ஷிண்டே முதல்வராகப் பதவியேற்றவுடன் ஆரே காலனியில் மெட்ரோ ரயில் பணிகளை உடனே தொடங்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து மெட்ரோ ரயில் பணிகள் ஆரே காலனியில் தீவிரம் அடைந்திருக்கிறது. உடனே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆரே காலனியில் மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். சிவசேனா இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரேயும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டார்.
ஆனால், மாநில அரசு தனது முடிவில் உறுதியாக இருக்கிறது. இப்போது உச்சநீதிமன்றமும் 84 மரங்களை வெட்ட அனுமதி அளித்துள்ளது. ஆனால் அதற்கு மேலும் மரங்களை வெட்டக்கூடாது என்ற நிபந்தனையோடு அனுமதியளித்துள்ளது. மரங்கள் ஆணையத்துடன் இயைந்து செயல்பட வலியுறுத்தியுள்ளது.
நீதிபதிகள் கருத்து:
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பிஎஸ் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மும்பை மெட்ரோ சார்பில் ஆஜரானார். 84 மரங்களையும் வெட்டுதல் என்பது ரயில்வே நடைமேடை அமைத்தல் மற்றும் கார் பார்கிங் அமைக்க அவசியமானது என்ற வாதத்தை முன்வைத்தார்.
வழக்கை விசாரித்தந் நீதிமன்றம், மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு அரே காலனியில் உள்ள 84 மரங்களையும் வெட்ட அனுமதி அளிப்பதாகக் கூறியது. அதேவேளையில் மெட்ரோ திட்டத்தின் மீதான பிரதான வழக்கை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைத்தது.
முன்னதாக கடந்த 2019 ஆண்டு ரிஷவ் ரஞ்சன் என்ற சட மாணவர் மனுவை வைத்து இந்த வழக்கை தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது என்பது குறிப்பிடத்தக்கது.