நாட்டில் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில், தெலங்கானாவில் மாநிலத்தில் 5 சிறுவர்கள் ஒன்று சேர்ந்து 17 வயது மாணவியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.'
பள்ளி சிறுவர்கள்:
தெலங்கானாவில் அமைந்துள்ளது ரங்காரெட்டி மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ளது ஹயத்நகர். இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 9 மற்றும் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 5 பேருக்கு செல்போனில் அடிக்கடி ஆபாச படம் பார்க்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், அந்த 5 மாணவர்களும் தங்களது பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவியை கூட்டாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமை செய்த இந்த 5 மாணவர்களும் 9 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஆவார்கள். இவர்கள் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமின்றி, அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோவாகவும் எடுத்துள்ளனர். இந்த வீடியோவை அவர்கள் தங்களது செல்போனில் வாட்ஸ் அப் மூலமாக பகிர்ந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த மாணவியின் தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இந்த கோர சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, காவல்துறையினர் அந்த 5 மாணவர்களையும் தற்போது பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பதின்ம வயது கூட நிரம்பாத பள்ளி சிறுவர்கள் தங்கள் பள்ளியில் படிக்கும் 17 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூர பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 5 பேர் மீதும் கடும் நடவடிக்கை என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்:
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 2021-ம் ஆண்டில் 4.28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகம் 2020-ம் ஆண்டைக் காட்டிலும் இது 15.3 சதவிகிதம் அதிகம் என்கிறது.
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக 2019ம் ஆண்டு 370 வழக்குகளும், 2020ம் ஆண்டில் 404 வழக்குகளும், 2021ம் ஆண்டு 442 வழக்குகளும் பதிவாகியுள்ளன. வரதட்சணை மரணம் தொடர்பாக 2019-ல் 28 வழக்குகளும், 2020ம் ஆண்டு 40 வழக்குகளும், 2021ம் ஆண்டு 27 வழக்குகளும் பதிவாகியுள்ளது. மொத்தத்தில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 2019ம் ஆண்டு 1,982 வழக்குகளும், 2020ம் ஆண்டு 2,025 வழக்குகளும், 2021ம் ஆண்டு 2,421 வழக்குகளும் பதிவாகி உள்ளதாக தமிழக காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.