மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் தட்டம்மை காட்டு தீ போல பரவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இன்று தட்டம்மை காரணமாக 8 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. இதையடுத்து, பலி எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. நேற்றுதான் ஒரு வயது குழந்தை தட்டம்மை காரணமாக உயிரிழந்தது. 


மும்பையில் தட்டம்மையால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 233ஆக அதிகரித்துள்ளது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் தானாஜி சாவந்த் நேற்று தெற்கு மும்பையில் உள்ள மாநில தலைமை செயலகத்தில் நடந்த கூட்டத்தில் தட்டம்மையால் நிலவி வரும் சூழல் குறித்து ஆய்வு செய்தார்.


மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுடன், நகராட்சி அதிகாரிகள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் மருத்துவர் மீதா வாஷி மற்றும் டாக்டர் அருண் கெய்க்வாட் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மும்பை மட்டும் இன்றி, ஜார்கண்டில் ராஞ்சி, குஜராத்தில் அகமதாபாத் மற்றும் கேரளாவின் மலப்புரம் ஆகிய இடங்களில் தட்டம்மை பாதிப்பு குழந்தைகள் மத்தியில் அதிகரித்து வருகிறது.


 






இதனால், சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வர, அந்த பகுதிகளுக்கு மத்திய அரசு நிபுணர்களை அனுப்ப உள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், தட்டம்மை அதிகரித்து வரும் போக்கு குறித்து நிபுணர் குழு ஆய்வு செய்யும் என்று தெரிவித்துள்ளது.


இந்நோய் அதிகமாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத்தான் தாக்குவதாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மும்பை மட்டுமல்லாது மகாராஷ்டிரா முழுவதும் இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே முக்கிய ஆலோசனை நடத்தினார்.


மும்பை மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரி இது குறித்து கூறுகையில், "குடிசைப்பகுதியில் ஒவ்வொரு வீடாகக் கணக்கெடுப்பு நடத்தி வருகிறோம். தடுப்பூசி போட்டுக்கொள்ளாத குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி மிகவும் முக்கியம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் தட்டம்மை, நிமோனியா போன்ற நோய்கள் குழந்தைகளை எளிதில் தாக்கும்.


தட்டம்மை எளிதில் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவக்கூடியது என்றார். இந்நோய் தொற்று ஏற்பட்டால் ஆரம்பத்தில் காய்ச்சல் மற்றும் இருமல் இருக்கும். அதன் பிறகே உடம்பில் சொறி உருவாகும்" என்று தெரிவித்துள்ளார்.