அரசியல் சாசன சட்ட நாளுக்கும் சாதி பஞ்சாயத்துக்கும் என்ன சம்பந்தம் என்று யுஜிசியிடம் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். 


இந்திய அரசமைப்புச் சட்ட நாளை, நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிலையங்களில் கொண்டாட வேண்டும் என்று பல்கலைக்கழகத் துணை வேந்தர்களுக்கு யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. 


இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலர் ரஜனிஷ் ஜெயின், அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி இருந்தார். அதில், ''இந்தியா: ஜனநாயகத்தின் தாய் (பாரத்: லோக்கந்த்ரா கி ஜனனி) என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். 


1. காலை வழிபாட்டுக் கூட்டத்தில் அரசியலமைப்புச் சாசனத்தின் முன்னுரையை வாசிக்க வேண்டும். 
2. அதேபோல அரசியலமைப்புச் சட்டத்தின்அடிப்படைக் கடமைகளையும் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் வாசிக்க வேண்டும்.  
3. அடிப்படைக் கடமைகளின் முக்கியத்துவத்தை அனைத்து கல்வி நிலையங்களிலும் விளக்க வேண்டும். 
4. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் அறிவிப்பு பலகையில், அடிப்படைக் கடமைகள் பற்றி ஒட்டி வைக்கவேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 


இதில், இந்தியா: ஜனநாயகத்தின் தாய் என்ற பெயரில் ஐசிஎச்ஆர் எனப்படும் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம் வெளியிட்ட புத்தகத்தின் கருத்துகளும் சேர்க்கப்பட்டிருந்தன. அதில், ''பண்டைய இந்தியா முடியாட்சி அல்ல, ஜனநாயகத் தன்மை கொண்டது என்று சான்றுகள் காட்டுகின்றன. இந்திய தத்துவவியலில் சிறப்பான அரசர், காப் (சாதி) பஞ்சாயத்துகள் மற்றும் அவற்றின் ஜனநாயக மரபுகள் ஆகியவற்றைக் கொண்டு, அரசியலமைப்புச் சட்ட நாளைக் கொண்டாட வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.




இந்நிலையில் இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி. காட்டமாக விமர்சித்துள்ளார். இதுபற்றித் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறி இருப்பதாவது:


"முன்னுதாரண மன்னர்" - "கிராம பாரம்பரிய பஞ்சாயத்து" என்ற உள்ளடக்கத்தில் கல்லூரிகளில் உரைகள் நிகழ்த்த யு.ஜி.சி உத்தரவு. 


அரசியல் சாசனத்திற்கும் பாரம்பரிய பஞ்சாயத்துக்கும் என்ன சம்பந்தம்?


இது கான்ஸ்டிடியூஷன் நாளா?
கட்டப் பஞ்சாயத்து நாளா? 


ஜனநாயகத்திற்கான நாளினை சனாதனத்தின் நாளாக மாற்ற கருத்துத் தாள் வழங்கியுள்ள இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் மீதும்,  யு.ஜி.சி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. பதிவிட்டுள்ளார். 


முன்னதாக, "அரசியலமைப்புச் சட்ட நாளான நவம்பர் 26 ஆம் தேதியில் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் அரசியல் சட்டத்தின் விழுமியங்களைப் பாதுகாப்பது தொடர்பான கருத்தரங்குகளை நடத்துமாறும், யுஜிசி தலைவர் சொன்னதுபோல் பிற்போக்கு நிகழ்ச்சிகள் எதுவும் நடக்காமல் தடுக்குமாறும் தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்" என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.