இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் குறித்து உச்ச நீதிமன்றம் நேற்று பரபரப்பு கருத்துகளை தெரிவித்திருந்தது. குறிப்பாக, குறுகிய கால பதவி காலத்துடன் தலைமை தேர்தல் ஆணையர்கள் நியமிப்பதில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்து. 2004ஆம் ஆண்டுக்கு பிறகு வந்த அரசுகள், தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை அழித்துவிட்டதாக சரமாரியாக குற்றச்சாட்டு சுமத்தி இருந்தது.
தேர்தல் ஆணையர்களை நியமிப்பதில் சீர்திருத்தங்களை கொண்டு வரக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், இன்றைய விசாரணையின்போது, முன்வைக்கப்பட்ட வாதங்களில் அனல் பறந்தன.
அதன் தொடர்ச்சியாக, திங்கள்கிழமை அன்று தேர்தல் ஆணையராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் நியமிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை பார்க்க விரும்புவதாக உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
மேலும், வழக்கு விசாரணையின் போது தேர்தல் ஆணையர் நியமிக்கப்படாமல் இருந்திருந்தால் முறையாக இருந்திருக்கும் என தெரிவித்த உச்ச நீதிமன்றம், நாளைக்கு இதுதொடர்பான ஆவணங்களை சமர்பிக்குமாறு அரசின் தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், "அருண் கோயலுக்கு வியாழன் அன்று பணியில் இருந்து விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டது. தேர்தல் ஆணையராக அவரது நியமனம் நவம்பர் 21 அன்று அறிவிக்கப்பட்டது. அருண் கோயலின் சமீபத்திய நியமனம், அவருக்கு விருப்ப ஓய்வு அளித்ததன் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்ட அனைவரும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள். ஆனால், அவர் அரசு செயலாளராக பதவி வகித்து வந்தார். வியாழக்கிழமை இந்த நீதிமன்றம் வாதங்களைக் கேட்டது. வெள்ளிக்கிழமை அவருக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டது. அவரது பணி நியமன ஆணை சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. திங்கட்கிழமை அவர் பணியை தொடங்கினார்.
மே மாதம் முதல் அந்த பதவி காலியாக இருந்ததால், அவர் நியமனத்திற்கு எதிராக இடைக்கால உத்தரவு கோரி விண்ணப்பம் செய்திருந்தேன். அப்படியானால், என்ன செயல்முறை? என்ன நடைமுறை? பின்பற்றப்பட்டது. ஒரே நாளில், நீங்கள் அவருக்கு அவசர அவசரமாக விஆர்எஸ் கொடுத்துள்ளீர்கள்" என கேள்வி எழுப்பினார்.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதி ஜோசப், "பொதுவாக, விருப்பு ஓய்வை பொறுத்தவரை, குறிப்பிட்ட ஊழியருக்கு மூன்று மாத நோட்டீஸ் அளிக்க வேண்டும்" என குறிப்பட்டார். இதனால்தான், அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதா என தனக்கு சந்தேகம் எழுந்துள்ளதாகவும், எனவேதான், நீதிமன்றம் இதுதொடர்பான ஆவணங்களை பார்க்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் பிரசாந்த பூஷண் தெரிவித்தார்.
இதை ஏற்று கொண்ட நீதிமன்றம், ஆவணங்களை சமர்பிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.