இன்ஸ்டாவில் பார்த்து பழகிய 13 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் கடத்தி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.
மும்பையை உலுக்கிய கொடூர சம்பவம்:
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ சட்டம்) கீழ் சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்திய 21 வயது இளைஞர் மீது வகோலா காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர், கோரேகானில் கைது செய்யப்பட்டார்.
குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர், ஹோட்டலில் பணிபுரிந்ததாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியுடன் சமூக ஊடகம் வழியே பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரும் சந்திக்க முடிவு செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியை அந்தேரியில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று அந்த இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர், கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி, கிராமத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி குஜராத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு, 3 முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். நீண்ட நேரமாகியும், சிறுமி வீடு திரும்பாததால், குடும்பத்தினர் அவரை தேடத் தொடங்கினர்.
13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. சில நாட்களுக்குப் பிறகு, சிறுமியே தானாக வீடு திரும்பி இருக்கிறார். திரும்பி வந்த பிறகும், அவர் எதையும் சொல்லவில்லை. ஆனால், குடும்பத்தினர் அவரிடம் விசாரித்தபோது, தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் கணக்கில் உள்ள புகைப்படங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை அவரது குடும்பத்தினர் அடையாளம் கண்டுள்ளனர். பின்னர், அவர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் பட்லாபூர் நகரில் உள்ள மழலையர் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பள்ளியில் துப்புரவு வேலை செய்து வரும் ஒருவர், இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை கண்டித்து செவ்வாய்கிழமை பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, ரயில் நிலையத்திலும் பத்லாபூரின் பிற பகுதிகளிலும் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. இதில், குறைந்தது 17 நகர காவல்துறை அதிகாரிகள் மற்றும் 8 ரயில்வே காவலர்கள் காயமடைந்தனர்.