தனது கணவரிடமிருந்து மாதம் 6 லட்சம் ரூபாய்க்கு மேல் ஜீவனாம்சம் பெற்று தரக் கோரி பெண் ஒருவர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றத்தில் அந்த பெண் சார்பாக ஆஜரான வழக்கறிஞரிடம் பெண் நீதிபதி சரமாரி கேள்விகளை எழுப்பினார்.


கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சுவாரஸ்யம்:


முன்னதாக, பெண் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், தனது தரப்பு வாதங்களை எடுத்துரைத்தார். "அவரது முழங்கால் வலி, பிசியோதெரபி, மருந்துகள் மற்றும் பிற தொடர்புடைய செலவுகளுக்கு மாதம் 4 முதல் 5 லட்சம் வரை தேவைப்படுகிறது.


வளையல்கள், செருப்புகள், கைக்கடிகாரங்கள் போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக மாதம் 50,000 ரூபாயும் உணவுக்கு 60,000 ரூபாய்க்கு மேல் தேவைப்படுகிறது. கால்வின் க்ளீன் டி-ஷர்ட்கள் போன்ற அனைத்து பிராண்டட் ஆடைகளையும் விவாகரத்து பெறும் கணவர் அணிகிறார். அதன் விலை ஒவ்வொன்றும் 10,000 ரூபாய் ஆகும். ஆனால், அந்த பெண் மட்டும் பழைய ஆடைகளை அணிகிறார்" என வழக்கறிஞர் தரப்பில் வாதிடப்பட்டது.


வழக்கறிஞரை வெளுத்து வாங்கிய பெண் நீதிபதி: விவாகரத்து செய்யும் கணவரிடம் இருந்து நியாயமற்ற முறையில் அந்த பெண் ஜீவனாம்சம் கேட்பதாக கூறிய நீதிபதி, "எந்த பொறுப்பும் இல்லாத ஒற்றைப் பெண்ணுக்கு இந்த தொகை அதிகமாக தெரிகிறது. குழந்தைகளைக் கவனிக்கும் பொறுப்பு கணவனுக்கும் இருக்கிறது.


இது ஒரு நபருக்குத் தேவை என்று தயவுசெய்து நீதிமன்றத்தில் சொல்லாதீர்கள். மாதந்தோறும் ஆறு லட்சத்து பதினாறாயிரத்து முன்னூறு ரூபாய் தேவைப்படுகிறதா? யாராவது இவ்வளவு செலவு செய்கிறார்களா? அதுவும் ஒற்றைப் பெண்ணுக்கு? அவர் செலவு செய்ய விரும்பினால், அவர் சம்பாதிக்கட்டும். கணவரிடம் கேட்கக் கூடாது.


அவரது கோரிக்கை நியாயமற்றது என்பதை உங்கள் கட்சிகாரரிடம் கூறுங்கள். உங்களுக்கு வேறு எந்தக் குடும்பப் பொறுப்பும் இல்லை. நீங்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டியதில்லை. ஜீவனாம்சம் கணவனுக்கு தண்டனையாக இருக்கக்கூடாது" என்றார்.


 






நீதிபதியின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நீதிபதியின் வீடியோவை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்து எக்ஸ் பயனர் ஒருவர் குறிப்பிடுகையில், "சரியான கேள்விகள் மற்றும் சரியான தீர்ப்புகளுடன் மீண்டும் வழி காட்டும் பெண் நீதிபதிகள். இது அடிக்கடி நடக்கும் என்று நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.