இந்தாண்டின் இறுதியில் ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் கட்ட தேர்தலும் செப்டம்பர் 25ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும்  அக்டோபர் 1ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தலும் நடக்க உள்ளது. வரும் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி, தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது.


தேர்தலுக்கு தயாரான காங்கிரஸ்: தேர்தலுக்கு இன்னும் 1 மாதம் கூட இல்லாத நிலையில், தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது காங்கிரஸ். மக்களவை தேர்தலில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்று பலமான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உருவெடுத்துள்ளது. 


இச்சூழலில், மாநில தேர்தல்களில் காங்கிரஸ் தலைவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். ஸ்ரீநகரில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் பேசிய அவர், ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும் தனக்கும் ரத்த பந்தம்  இருப்பதாக கூறினார்.


விரிவாக பேசிய ராகுல் காந்தி, "ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து தரப்படும் என்பது பல எதிர்க்கட்சிகள் மற்றும் ஆர்வலர்களின் கோரிக்கை. தேர்தலுக்கு முன்பே செய்யப்படும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், பரவாயில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. இது ஒரு முன்னேற்றம்.


ஜம்மு காஷ்மீர் மக்களிடம் ராகுல் நெகிழ்ச்சி: வெறுப்பின் சந்தையில் அன்பின் கடைகளைத் திறக்க மக்களை கேட்டு கொள்கிறேன். நான் ஜம்மு காஷ்மீர் மக்களை நேசிக்கிறேன். எனக்கும் அவர்களுக்கும் இருப்பது மிகவும் பழைய உறவு. அவர்களுடன் ரத்த உறவு உள்ளது.


கூடிய விரைவில் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதே எங்களின் முன்னுரிமை. இந்தியா கூட்டணிக்கும் அதுதான் முன்னுரிமை. ஜம்மு காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகள் (மேலும்) மீட்டெடுக்கப்படும் என்று நம்புகிறோம். இந்தியாவில், சுதந்திரத்திற்குப் பிறகு, பல யூனியன் பிரதேசங்கள் மாநிலங்களாக ஆக்கப்பட்டன. ஆனால், ஒரு மாநிலம் தரம் தாழ்த்தப்பட்ட நிகழ்வு இது ஒன்றுதான். இதுவே முதல் முறை. இதற்கு முன் நடந்ததில்லை.


எங்களுக்கு (காங்கிரஸ்) ஜம்மு காஷ்மீர் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவது முக்கியம். நான் ஏன் சொல்கிறேன் என்றால், நாடு முழுவதும் ஜனநாயகத்தை நான் பாதுகாக்கிறேன். ஆனால், என்னைப் பொறுத்தவரை, ஜம்மு காஷ்மீர் மக்களின் மனதில் உள்ள வலியை அகற்றுவதே நோக்கம்" என்றார்.