இந்தியாவில் செயல்பட்டு வரும் முக்கியமான டாக்ஸி சேவை நிறுவனங்களில் ஒன்று ஒலா. இந்த நிறுவனத்தின் சேவையை இந்தியாவின் முக்கிய பெருநகரங்களில் உள்ள மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் சேவையை பயன்படுத்தும் போது வாடிக்கையாளர்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. அப்படி ஏற்பட்ட ஒரு சிக்கல் தொடர்பாக புகார் அளித்த நபர் தற்போது 15ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு பெற்றுள்ளார். 


மும்பையின் காந்த்விலி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரேயன்ஸ் மாமானியா. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒலா டாக்ஸி மூலம் ஒரு இடத்திற்கு பயணம் செய்துள்ளார். அந்தப் பயணத்திற்கு 372 ரூபாய் கட்டணமாக முதலில் ஒலா செயலியில் காட்டியுள்ளது. அதன்பின்னர் அவர் அந்த இடத்தில் இறங்கியபோது அந்தக் கட்டணம் 434 ரூபாயாக அதிகரித்துள்ளது. அப்போது ஸ்ரேயன்ஸ் மாமானியா அந்த ஒலா டிரைவரிடம் முறையிட்டுள்ளார். அதற்கு அந்த டிரைவர்,”இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறும். அதை ஏன் நீங்கள் இவ்வளவு பெரிய பிரச்னையாக பார்க்கிறீர்கள்” என்று கேட்டுள்ளார். 




இந்த புகார் தொடர்பாக ஸ்ரேயன்ஸ் ஒலா வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டுள்ளார். எனினும் அவருக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து அவர் நுகர்வர் நல ஆணையத்திடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார். அதன்படி அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் கொடுத்துள்ளார். அதில் தேவையில்லாமல் தன்னிடம் இருந்து 62 ரூபாய் அதிகமாக ஒலா நிறுவனம் வசூலித்துள்ளது. ஆகவே இதற்கு உரிய நஷ்ட ஈடாக 4 லட்சம் ரூபாய் வரை தரவேண்டும் என்று கூறியிருந்தார். 


இந்தப் புகார் தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் முதல் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அதற்கான தீர்ப்பு வந்துள்ளது. அதில், 10ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த புகார் தொடர்பாக அவர் செய்த செலவுகளுக்கு 5 ஆயிரம் ரூபாயும் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒலா டாக்ஸியில் பயணம் செய்த ஒருவர் 62 ரூபாய் அதிகமாக வசூலிக்கப்பட்டதற்கு 15 ஆயிரம் வரை நஷ்ட ஈடு பெற்றுள்ளது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண