நாட்டில் உள்ள சில கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கான உடைகளில் கொண்டு வரும் மாற்றங்கள் சில சமயங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது. கர்நாடகாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்த விவகாரம் விஸ்வரூபமாக வெடித்த நிலையில், தற்போது மும்பையிலும் அப்படி ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.


ஹிஜாப், புர்காவிற்கு தடை:


மும்பையில் அமைந்துள்ளது செம்பூர். இந்த பகுதியில் பிரபல கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு பள்ளி மற்றும் கல்லூரி ஒரே வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்த நிலையில்,  பள்ளி மாணவ, மாணவிகளுக்கான புதிய சீருடை விதியை அமல்படுத்தியுள்ளது. இந்த விதிப்படி, பள்ளிக்குள் 12ம் வகுப்பு மாணவிகள் ஹிஜாப் மற்றும் புர்கா அணிந்து வருவது தடை விதிக்கப்பட்டுள்ளது. தலையில் முக்காடு போன்றும் அணிந்து வருவதற்கு தடை விதித்துள்ளனர்.




கடந்த 2 நாட்களாக இந்த விவகாரம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நேற்று ஏராளமான இஸ்லாமிய மாணவிகளும், அவர்களது பெற்றோர்களும் பள்ளி வாசலில் குவிந்தனர். சில முன்னாள் மாணவ, மாணவிகளும் அவர்களுக்கு ஆதரவாக பள்ளி வாசலில் திரண்டனர்.


1978-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த பள்ளிக்கு இப்போதுதான் சீருடை விதியை அமல்படுத்தியுள்ளனர். இந்த விதிப்படி மாணவர்கள் சட்டை, பேண்ட் அணிந்திருக்க வேண்டும். மாணவிகள் சல்வார், கமீஸ், மற்றும் ஜாக்கெட் போன்ற அங்கி அணிந்திருக்க வேண்டும். இந்த வளாகத்திலே கல்லூரியும் இயங்கி வருகிறது. ஆனால், அவர்களுக்கு எந்த புதிய ஆடை விதியும் விதிக்கப்படவில்லை.




பெரும் பரபரப்பு:


மாணவிகள் தங்களை துப்பட்டா அணிய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், பள்ளி நிர்வாகம் அதற்கு அனுமதிக்க மறுத்துள்ளது. அதே சமயம், மாணவிகள் யாரேனும் துப்பட்டா அணிந்திருந்தால் கட்டாயப்படுத்தி அந்த துப்பட்டாவை ஆசிரியைகள் அகற்ற கூறுகின்றனர் என்று 12ம் வகுப்பு மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.


இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர். கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி இருந்தபோது அங்கு மாணவிகள் ஹிஜாப் மற்றும் புர்கா அணிந்து கல்வி வளாகத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், கலவரத்தையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Crime: லாரியில் சிக்கிய பெண்; தலை துண்டாகி உயிரிழப்பு... கணவர் கண்முன்னே சோகம்...சென்னையில் பயங்கரம்!


மேலும் படிக்க: ‘நான் செயின் ஸ்மோக்கர்' ..விமானத்தில் சிகரெட் பிடித்த இளைஞரால் நடுவானில் பரபரப்பு