ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில் டெல்லி அரசுக்கும் மத்திய அரசின் பிரதிநிதியான துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார போட்டி நிலவி வந்தது. அதை தீர்க்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த சட்ட போராட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


இதையடுத்து, ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட மாநில அரசின் நிர்வாக அதிகாரங்களை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. அதன்படி, டெல்லி அரசின் அதிகாரிகளின் நியமனம், பணியிடமாற்றம் போன்ற விஷயங்களில் முடிவு எடுக்கும் அதிகாரம் மீண்டும் துணை ஆளுநருக்கு வழங்கப்பட்டது.


"டெல்லி விவகாரத்தில் சட்டத்தை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளது"


உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, மாநில அரசின் அதிகாரங்களை நிலைநாட்டிய நிலையில், மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டம், டெல்லி அரசுக்கு பேரிடியாக அமைந்தது. அவசர சட்டத்தை நாடாளுமன்றத்தில் மசோதாவாக நிறைவேற்றி அதை வழக்கமான சட்டமாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியது.


அதன்படி, நாடாளுமன்றத்தின் நேற்றைய கூட்டத்தில் இது தொடர்பான மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், எதிர்கட்சிகளின் தொடர் அமளியின் காரணமாக அதை விவாதத்திற்கு எடுத்த கொள்ள முடியவில்லை.


இந்த நிலையில், இன்றைய கூட்டத்தில் டெல்லி தேசிய தலைநகர் பிரதேச (திருத்தம்) மசோதா, விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "கடந்த 2015ஆம் ஆண்டு, டெல்லியில் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தது. போராடுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட கட்சி. சேவை செய்வதில்லை.


நேருவை புகழ்ந்து பேசினாரா மத்திய அமைச்சர் அமித் ஷா?


பிரச்னை என்னவென்றால், அதிகாரிகளை இடமாற்றுவதற்கான உரிமையை பெறுவது அல்ல. ஆனால், தாங்கள் கட்டிய பங்களாக்களை மறைத்து வைப்பது போல தாங்கள் செய்யும் ஊழலை மறைக்க ஊழல் தடுப்பு பிரிவை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதான். அவசர சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, டெல்லி தேசிய தலைநகர் பிரதேசம் தொடர்பான எந்தவொரு விவகாரத்திலும் சட்டங்களை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளது.


சுதந்திரத்திற்குப் பிறகு, ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல் மற்றும் டாக்டர் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் கூட டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்தை வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர்" என்றார்.


நடந்தது என்ன?


இதற்கு பதில் அளித்து பேசிய காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "அமித்ஷா நேருவையும் காங்கிரஸையும் புகழ்ந்து பேசுவதைப் பார்க்கிறோம். எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இது பகலா அல்லது இரவா? அவர் வாயில் 'நெய், சக்கரை' போட வேண்டும்.
நேருவின் உதவியை நீங்கள் உண்மையாக நாடியிருந்தால், மணிப்பூர் மற்றும் ஹரியானாவை நடந்ததை நாடு கண்டிருக்காது" என்றார். 


இதை தொடர்ந்து பேசிய அமித் ஷா, "நேருவை நான் பாராட்டவில்லை. அவர் கூறியதையே மேற்கோள் காட்டுகிறேன். டெல்லி தொடர்பான விவகாரங்களில் மத்திய அரசு சட்டங்களை இயற்றுவதற்கு அரசியலமைப்பில் விதி உள்ளது. 


கூட்டணியை பற்றி சிந்திக்காமல் டெல்லியை பற்றி சிந்திக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்களை கேட்டுக்கொள்கிறேன். (எதிர்க்கட்சிகள்) கூட்டணி அமைத்த பிறகும், நரேந்திர மோடி முழு பெரும்பான்மையுடன் மீண்டும் பிரதமராவார்" என்றார்.