மும்பையில் இளைஞர் ஒருவரும், இளம் பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். இதையடுத்து, இருவரும் வெளியில் சந்தித்து பேசி பழகி வந்தனர். இவர்கள் நெருக்கமாக பழகியதன் விளைவாக, கடந்த 2019ம் ஆண்டு அந்த இளம் பெண் கருத்தரித்துள்ளார். இதை அந்த பெண் தனது காதலனிடம் கூறியுள்ளார். ஆனால், அந்த பெண் கருத்தரித்தது தெரிந்தது முதல் அந்த பெண்ணின் காதலன் அந்த பெண்ணை விட்டு விலகத் தொடங்கியுள்ளார்.


தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த பெண், தான் கர்ப்பமாக இருப்பதை தனது வீட்டாரிடம் கூற விரும்பவில்லை. இதனால், அந்த பெண் தனது வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று எண்ணிய அந்த பெண், 2020ம் ஆண்டு தனது காதலன் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.




பெண்ணை காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கிய அந்த இளைஞரை பாலியல் வன்கொடுமை குற்றத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 27-ந் தேதி அந்த பெண்ணிற்கு அழகிய குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தை பிறந்த மூன்றே நாட்களில் அந்த குழந்தையை தனியாக தவிக்கவிட்டு அந்த பெண் தலைமறைவானார். தற்போது, அந்த குழந்தை காப்பகத்தில் பரமாரிக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், அந்த இளைஞர் மீதான வழக்கு பாம்பே உயர்நீதிமன்றத்தில் கடந்த 12-ந் தேதி விசாரணைக்கு வந்தது. நீதிபதி பாரதி டாங்ரே இந்த வழக்கை விசாரித்தார்.  அப்போது, கைது செய்யப்பட்ட அந்த இளைஞர் தான் காதலித்த பெண்ணையே திருமணம் செய்து கொள்வதாகவும், அந்த குழந்தையை நானே வளர்க்கிறேன் என்றும் சம்மதம் தெரிவித்தார்.




ஆனால், இதுதொடர்பாக விளக்கமளித்த காவல்துறையினர் ஏமாற்றப்பட்ட பெண்ணை இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், பராமரிப்பு மையத்தில் வளர்க்கப்பட்ட அந்த குழந்தை ஏற்கனவே தத்தெடுக்கப்பட்டு விட்டது என்றும் கூறியுள்ளனர். இந்த வழக்கை தீர விசாரித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணை ஒரு வருடத்திற்குள் கண்டுபிடித்து திருமணம் செய்துகொள்ள குற்றவாளி ஒப்புக்கொண்டால் அவருக்கு ஜாமீன் வழங்கப்படும். ஆனால், ஒரு வருடத்திற்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறி அந்த கைது செய்யப்பட்ட இளைஞருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.


கர்ப்பமாக்கி ஏமாற்றிய காதலனே காணாமல்போன காதலியை கண்டுபிடித்து திருமணம் செய்து கொள்வதற்காக நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க : பாலியல் வன்கொடுமை...பாதிக்கப்பட்ட சிறுமியை திருமணம் செய்து கொள்ள நிபந்தனை விதிப்பு..குற்றவாளிக்கு நீதிமன்றம் ஜாமீன்


மேலும் படிக்க : அனைத்து மாநிலங்களிலும் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழுடன் ஆதார் அட்டை... அரசு தகவல்