புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழுடன் அடுத்த சில மாதங்களில் அனைத்து மாநிலங்களிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, இந்த வசதி நடைமுறையில் உள்ள 16 மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கும் விரிவுப்படுத்தப்படுகிறது.

தற்போது, ​​16 மாநிலங்களில் ஆதார் இணைக்கப்பட்ட பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை ஒரு வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்டது. காலப்போக்கில், பல்வேறு மாநிலங்களும் இதில் சேர்க்கப்பட்டன.

மீதமுள்ள மாநிலங்களில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆதார் எண்களை வழங்கும் அரசு நிறுவனமான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) அடுத்த சில மாதங்களில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள புதிய பெற்றோர்களுக்கு இந்த கூடுதல் வசதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் மூலம் விவரங்கள் சேகரிக்கபடுவதில்லை. அவர்களின் ஆதார் அட்டை அவர்களின் பெற்றோரின் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டு மக்கள்தொகை தகவல் மற்றும் முக புகைப்படத்தின் அடிப்படையில் ப்ராசஸ் செய்யப்படுகிறது. எனவே, குழந்தைக்கு 5 மற்றும் 15 வயது ஆனதும் பயோமெட்ரிக் அப்டேட் (பத்து விரல்கள், கருவிழி மற்றும் முகப் புகைப்படம்) தேவைப்படுகிறது.

1,000க்கும் மேற்பட்ட மாநில மற்றும் மத்திய அரசு திட்டங்களுக்கான பயனாளிகளை அடையாளம் காணவும், அங்கீகரிக்கவும், பலன்களை மாற்றவும் மற்றும் நகல் நீக்கத்தை உறுதிப்படுத்தவும் ஆதாரே பயன்படுத்துகின்றது. இவற்றில் கிட்டத்தட்ட 650 திட்டங்கள் மாநில அரசுகள் மற்றும் 315 மத்திய அரசால் நடத்தப்படும் திட்டங்கள். இவை அனைத்தும் ஆதார் தகவல்களையும் அதன் பயோமெட்ரிக் விவரங்களையும் பயன்படுத்துகின்றன.

இதுவரை 134 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, இந்த 12 இலக்க ஆதார் அட்டையின் விவரங்களை புதுப்பிப்பக்கவும் பதிவு செய்வதற்கும் கிட்டத்தட்ட 20 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் 18 வயதுக்குட்பட்டவர்கள் மட்டும் 4 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். 30 லட்ச விண்ணப்பங்கள் வயது வந்தவர்கள் தாக்கல் செய்த விண்ணப்பிங்களாகும்.

பிறந்த நேரத்தில், பிறப்புச் சான்றிதழுடன் ஆதார் வழங்கப்படுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும் எனக் கூறப்படுகிறது. இந்தியப் பதிவாளர் ஜெனரலுடன் இது தொடர்பாக யுஐடிஏஐ பணியாற்றி வருகிறது. இந்த செயல்முறைக்கு கணினிமயமாக்கப்பட்ட பிறப்பு பதிவு அமைப்பு தேவைப்படுகிறது.