பாலியல் வன்கொடுமை வழக்கில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அவரது குழந்தையை (நிகழ்ந்ததாகக் கூறப்படும் பாலியல் வன்கொடுமையில் சிறுமிக்கு பிறந்தவர்) மகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் கிரி மாவட்டத்தைச் சேர்ந்த குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 363, 366, 376 மற்றும் போக்சோ சட்டத்தின் 3/4 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முதல் தகவல் அறிக்கையின்படி, சிறுமிக்கு 17 வயதாக இருந்தபோது, மார்ச் 2022 இல் குற்றம் சாட்டப்பட்டவரால் ஏமாற்றப்பட்டுள்ளார்.
நீதிபதி தினேஷ் குமார் சிங் அமர்வு, குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. அந்த உத்தரவில், "பாதிக்கப்பட்ட சிறுமியை இந்து முறைப்படி குற்றம்சாட்டப்பட்டவர் திருமணம் செய்து கொண்டு அதைப் பதிவு செய்ய வேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில், அவருக்கு ஜாமீன் வழங்கினால் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரது தந்தையும் கூறியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குழந்தைக்கு, மனைவி மற்றும் மகளுக்கு வழங்க வேண்டிய அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும்" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தனது கட்சிக்காரர் அந்த சிறுமியை திருமணம் செய்யத் தயாராக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
இருவரும் காதலித்து வந்ததால் திருமணத்தை செய்து கொள்வதற்காக இருவரும் ஓடிச் சென்றதாகவும் வழக்கறிஞர் கூறியுள்ளார். இதை கேட்ட நீதிபதி, "இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சிறையில் இருக்கும் குற்றம்சாட்டப்பட்டவரின் மூலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஏற்கனவே ஒரு குழந்தையைப் பெற்றெடுத்ததைக் கருத்தில் கொள்ளப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரது தந்தையும் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது" என தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை குற்றம்சாட்டப்பட்டவருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனையாக வழங்கி இருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது.