Mumbai Rain: மும்பையில் இரவோடு இரவாக கொட்டிய கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் கொட்டி தீர்த்த அதிகனமழை:
மும்பையில் இன்று அதிகாலை 1 மணி முதல் காலை 7 மணி வரையிலான 6 மணி நேரத்தில், பல்வேறு இடங்களில் 300 மிமீ மழை பதிவாகியுள்ளது. சில தாழ்வான பகுதிகளில் பெய்த கனமழையால் தண்ணீர் தேங்கி புறநகர் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. இன்றும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களுக்கு சிரமத்தை தவிர்க்கும் வகையில், மாநகராட்சியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இரவு முதல் காலை வரை கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு:
கிங்ஸ் சர்கிள்பகுதியில் முழங்கா உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடுகிறது.
பல இடங்களில் தண்டவாளங்கள் நீரில் முழ்கியுள்ளன. இதனால் ஏராளமான ரயில்களின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
கிழக்கு குர்லா பகுதிகளில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து ஓடுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பல பிரதான சாலைகளிலும் மழைநீர் தேங்குவதால், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சில இடங்களில் மழைநீரில் பயணித்த வாகனங்கள் பழுதடைந்து நின்றன. இதனால், ஆங்காங்கே கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
சுரங்கபாதைகளிலும் மழைநீர் முழங்கால் அளவிற்கு தேங்கியுள்ளது. வடிகால்கள் இருந்தும் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.